தமிழக செய்திகள்

பாம்பனில் மீனவர் வலையில் சிக்கிய 7 கூறல் மீன்கள்...ரூ.3.67 லட்சத்துக்கு ஏலம்!

105 கிலோ எடை கொண்ட கூறல் மீன்களின் வயிற்றுப் பகுதியில் உள்ள ‘நெட்டி’க்கு அதிக மவுசு உள்ளது.

ராமேசுவரம்,

ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் அருகே மீனவர் வலையில் சிக்கிய 7 கூறல் மீன்கள் ரூ.3 லட்சத்து 67 ஆயிரத்து 500-க்கு விற்பனை செய்யப்பட்டன. மொத்தம் 105 கிலோ எடை கொண்ட இந்த மீன்களின் வயிற்றுப் பகுதியில் உள்ள ‘நெட்டி’ மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு பயன்பாடுகளுக்குப் பயன்படுத்தப்படுவதால் அதிக விலைக்கு விற்பனையாகியுள்ளன.

வலையில் சிக்கிய 7 கூறல் மீன்கள்

பாம்பனில் இருந்து மன்னார் வளைகுடா கடல் பகுதிக்கு நேற்று 90-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் மீன்பிடிக்கச் சென்றனர். மீன்பிடித்துவிட்டு இன்று கரை திரும்பியபோது, ஒரு மீனவரின் வலையில் 7 கூறல் மீன்கள் சிக்கியிருந்தன.

ஒவ்வொரு மீனும் சராசரியாக 15 கிலோ எடை கொண்டிருந்தது. மொத்தம் 105 கிலோ எடை கொண்ட இந்த மீன்கள், கிலோ ரூ.3,500 வீதம் ரூ.3,67,500-க்கு ஏலம் போயின.

மருத்துவப் பயன்பாட்டுக்குத் தேவைப்படும் ‘நெட்டி’

இதுகுறித்து பாம்பன் மீனவர்கள் கூறுகையில், “கூறல் மீன்களைப் பொதுவாக உணவுக்காகப் பயன்படுத்துவதில்லை. இவற்றின் வயிற்றுப் பகுதியில் ரப்பர் டியூப் போன்ற வடிவத்தில் ‘நெட்டி’ எனப்படும் காற்றுப்பை காணப்படும். இது மருத்துவப் பயன்பாடுகளுக்குத் தேவைப்படுகிறது.

மேலும், உயர்ரக மதுபானங்கள் மற்றும் ஜெல்லி மிட்டாய்கள் தயாரிப்பிலும் இந்த நெட்டி பயன்படுத்தப்படுகிறது. அவற்றின் சுவையை மேம்படுத்தவும், கெட்டுப்போகாமல் பாதுகாக்கவும் உதவுகிறது. கிழக்கு ஆசிய நாடுகளில் இந்த நெட்டியைக் கொண்டு விலை உயர்ந்த சூப் தயாரிக்கப்படுகிறது” என்றனர்.

SCROLL FOR NEXT