தமிழக செய்திகள்

கோடை சீசனில் ஊட்டி தாவரவியல் பூங்காவுக்கு 7 லட்சம் சுற்றுலா பயணிகள் வருகை

கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு அதிகமான சுற்றுலா பயணிகள் ஊட்டி தாவரவியல் பூங்காவுக்கு வருகை தந்துள்ளனர்.

நீலகிரி,

ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் கடந்த மாதம் 18-ந் தேதி முதல் 28-ந் தேதி வரை மலர் கண்காட்சி நடைபெற்றது. 11 நாட்கள் நடைபெற்ற மலர் கண்காட்சியை 2.10 லட்சம் சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர். இந்த ஆண்டு ஏப்ரல், மே மாதங்களில் மொத்தம் 7 லட்சத்து 14 ஆயிரத்து 685 பேர் தாவரவியல் பூங்காவுக்கு வந்துள்ளனர். ஏப்ரல் மாதத்தில் 2 லட்சத்து 47 ஆயிரத்து 7 பேரும், மே மாதத்தில் 4 லட்சத்து 67 ஆயிரத்து 678 பேரும் வந்திருந்தனர்.

கடந்தாண்டு ஏப்ரல், மே ஆகிய 2 மாதங்களில் தாவரவியல் பூங்காவுக்கு 6 லட்சத்து 10 ஆயிரத்து 931 சுற்றுலா பயணிகள் வந்தனர். கடந்த ஆண்டை ஒப்பிடும்போது இந்த ஆண்டு ஒரு லட்சத்திற்கும் அதிகமான சுற்றுலா பயணிகள் கூடுதலாக வந்துள்ளனர். பள்ளிகள் திறப்பு தள்ளி வைக்கப்பட்டு உள்ளதால், சுற்றுலா பயணிகளின் வருகை தற்போது வரை குறையாமல் உள்ளது.

நீலகிரியில் தோட்டக்கலைத்துறை மேற்கொண்ட நடவடிக்கைகளால் தாவரவியல் பூங்கா மட்டுமல்லாமல் மற்ற பூங்காக்களிலும் சுற்றுலா பயணிகள் வருகை கடந்த ஆண்டை விட அதிகரித்துள்ளது. ரோஜா பூங்காவில் ரோஜா கண்காட்சி நடைபெற்ற நாட்களில் கடந்த ஆண்டு 34 ஆயிரத்து 999 பேர் வந்த நிலையில், இந்த ஆண்டு 63 ஆயிரத்து 313 பேர் வந்தனர்.

காட்டேரி பூங்காவில் மலை பயிர்கள் கண்காட்சி நடந்த நாட்களில் கடந்த ஆண்டு 2 ஆயிரத்து 230 பேர் வந்த நிலையில், இந்த ஆண்டு 4 ஆயிரத்து 257 பேர் வந்துள்ளனர்.

SCROLL FOR NEXT