சென்னை,
காவல்துறையினரின் தீவிர நடவடிக்கையின் பயனாக, தப்பியோடிய 17 கைதிகளில் 13 பேர் 24 மணி நேரத்திற்குள் பிடிக்கப்பட்டதாக தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் / படைத்தலைவர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
26-10-2026 அன்று இரவு சுமார் 10 மணியளவில், தேனி மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டிருந்த 17 கைதிகள் சிறையிலிருந்து தப்பிச் சென்றனர். இவர்களில் கொலை (7), வழிப்பறி (6), போதைப் பொருள் தொடர்பான குற்றங்கள் (2), ஆயுதம் வைத்திருத்தல் (1), திருட்டு (1) போன்ற பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்கள் ஆவர்.
இத்தகவல் கிடைத்ததும், தென் மண்டலம் மற்றும் மத்திய மண்டல களப்பணியில் உள்ள காவல் அதிகாரிகளுக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டு, மாநிலம் முழுவதும் காவல்துறையினர் உஷார்படுத்தப்பட்டனர். வாகனத் தணிக்கை, தங்கும் விடுதிகளில் சோதனை. சோதனைச் சாவடிகளில் கண்காணிப்பைத் தீவிரப்படுத்துதல் மற்றும் அந்தந்த பகுதிகளில் தீவிர தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அனைத்து அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தப்பட்டது.
காவல்துறை தலைமை இயக்குநர் / படைத்தலைவர் முனைவர் மகேஷ் குமார் அகர்வால், இ.கா.ப.. அவர்களின் உத்தரவின்பேரில், தென் மண்டல காவல்துறைத் தலைவர் விஜேந்திர எஸ். பிதரி, இ.கா.ப., அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று. மீட்பு மற்றும் தேடுதல் நடவடிக்கைகளை ஒருங்கிணைத்தார். தமிழ்நாடு சிறப்புக் காவல் படை மற்றும் சிறப்பு இலக்குப் படை ஆகியவற்றைச் சேர்ந்த காவலர்களும் இந்நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டனர்.
தொழில்நுட்ப தகவல்களை சேகரிக்கும் வகையில், கண்காணிப்பு கேமராக்களின் பதிவுகள் ஆய்வு செய்யப்பட்டதுடன். ஆளில்லா விமானங்கள் (டிரோன்கள்) மூலமாகவும் சம்பந்தப்பட்ட பகுதிகளில் தீவிரமாக தேடுதல் வேட்டை மேற்கொள்ளப்பட்டது. மேலும், காவல்துறை தலைமை இயக்குநர் / படைத்தலைவர் கேரள மாநில காவல்துறை தலைமை இயக்குநர் ஆர்.ஏ. சந்திரசேகர். இ.கா.ப., அவர்களுடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு. கண்காணிப்பை அவர்கள் மாவட்டங்களில் எல்லையோர தீவிரப்படுத்துமாறு கேட்டுக்கொண்டார்கள். தமிழ்நாடு காவல்துறையினரின் தீவிர நடவடிக்கையின் பயனாக, தப்பியோடிய 17 கைதிகளில் 13 பேர் 24 மணி நேரத்திற்குள் பிடிக்கப்பட்டனர்.
இந்நடவடிக்கையில் சிறப்பாக பணியாற்றிய காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்களை காவல்துறை தலைமை இயக்குநர் / படைத்தலைவர் முனைவர் மகேஷ் குமார் அகர்வால், இ.கா.ப., அவர்கள் பாராட்டினார்கள். எஞ்சிய கைதிகளை பிடிப்பதற்கான தேடுதல் நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.