தமிழக செய்திகள்

வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய 5 இளஞ்சிறார்கள் உள்பட 7 பேர் கைது

தூத்துக்குடியைச் சேர்ந்த ஒருவரின் மனைவிக்கு வேறொரு நபர் 4 மாதங்களாக இன்ஸ்டாகிராம் மூலம் மெசேஜ் அனுப்பி வந்ததால், மேற்சொன்ன இருவருக்கும் இடையே முன்விரோதம் ஏற்பட்டுள்ளது.

தூத்துக்குடி,

தூத்துக்குடியில் இன்ஸ்டாகிராம் விவகாரத்தில் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய 5 சிறுவர்கள் உள்பட 7 பேரை போலீசார் கைது செய்தனர்.

இன்ஸ்டாகிராம் மெசேஜ் மூலம் முன்விரோதம்

தூத்துக்குடி கால்டுவெல் காலனியை சேர்ந்தவர் சிதம்பரம் (வயது 23). இவரது மனைவிக்கு கீழ சண்முகபுரத்தைச் சேர்ந்த சுபாஷ் என்பவர் 4 மாதங்களாக இன்ஸ்டாகிராம் மூலம் மெசேஜ் அனுப்பி வந்தாராம். இதனால் இருவருக்கும் இடையே முன்விரோதம் ஏற்பட்டுள்ளது.

வீட்டின் மீது பெட்ரோல்குண்டு வீச்சு

இதில் ஆத்திரமடைந்த சிதம்பரம், அவரது உறவினர் வின்ஸ்டன்(எ) பண்டாரி(18) மற்றும் 5 சிறுவர்கள் சேர்ந்து சுபாஷ் வசித்து வரும் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசி உள்ளனர். இந்த பெட்ரோல் குண்டு கேட்டின் மீது விழுந்து தீப்பிடித்துள்ளது.

5 சிறுவர்கள் உள்பட 7 பேர் கைது

இதுகுறித்த புகாரின் பேரில் தூத்துக்குடி தென்பாகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து 5 சிறுவர்கள் உள்பட 7 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT