தமிழக செய்திகள்

தெரு குழாயில் தண்ணீர் பிடிக்க சென்ற பெண்ணிடம் 7 பவுன் தங்க நகை பறிப்பு!

மீஞ்சூர் அருகே குடிநீர் பிடித்துக் கொண்டிருந்த பெண்ணிடம் 7 பவுன் நகையை பறித்துச் சென்ற மர்ம வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.

திருவள்ளூர்,

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அடுத்த கேசவபுரம் கலைஞர் நகர் முதல் தெருவை சேர்ந்தவர் வரலட்சுமி (45). இவர் நேற்று முன்தினம் இரவு வீட்டின் அருகே உள்ள தெருக்குழாயில் குடிநீர் பிடித்துக் கொண்டிருந்தார்.

அப்போது அந்த வழியாக வந்த வாலிபர் ஒருவர் குடிப்பதற்கு தண்ணீர் கேட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து வரலட்சுமி குடத்தை எடுத்து வைத்து, குழாயில் தண்ணீர் பிடித்து குடிக்குமாறு கூறியுள்ளார்.

தண்ணீர் குடித்துவிட்டு அங்கு நின்றிருந்த வரலட்சுமியின் கழுத்தில் இருந்த நகையை அந்த வாலிபர் திடீரென பறிக்க முயன்றார். உடனே வரலட்சுமி அவரது சட்டையை பிடித்து இழுத்ததாக தெரிகிறது.

இதனால் ஆத்திரமடைந்த வாலிபர், வரலட்சுமியை கீழே தள்ளிவிட்டு, அவரது கழுத்தில் இருந்த 7 பவுன் நகையை பறித்துக் கொண்டு தப்பி ஓடினார்.

வரலட்சுமியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். ஆனால் அதற்குள் வடமாநிலத்தை சேர்ந்ததாக கூறப்படும் அந்த வாலிபர் தப்பி ஓடி தலைமறைவானார்.

இதுகுறித்து வரலட்சுமி மீஞ்சூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.