சென்னை,
தமிழகம் முழுவதும் உள்ள அரசு நூலகங்களில் விதிகளை மீறி கொள்முதல் செய்யப்பட்ட 70,674 போலி நூல்கள் கண்டறியப்பட்டு, பொதுமக்களின் வாசிப்பிலிருந்து அதிரடியாக அகற்றப்பட்டுள்ளதாக பொது நூலகத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
கடந்த தி.மு.க. ஆட்சியில் கட்டப்பட்டு, சமீபத்தில் முதல்-அமைச்சர் விஜய்யால் திறந்து வைக்கப்பட்ட கோவை காந்திபுரம் 'பெரியார் அறிவுலகம்' நூலகத்தில் போலி நூல்கள் இடம்பெற்றிருப்பது அண்மையில் சர்ச்சையை ஏற்படுத்தியது.
நூல் தேர்வுக் குழுவில் இடம்பெற்றிருந்த எழுத்தாளர் பெருமாள் முருகன், நூலகத்தில் தகுதியற்ற மற்றும் தவறான வரலாற்றுத் தகவல்களைக் கொண்ட நூல்கள் இடம்பெற்றிருப்பதை வெளிக்கொண்டு வந்தார். இது தொடர்பாக அவர் சமூக வலைதளங்களில் வெளியிட்ட பதிவுகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தின.
கடந்த 2024-ம் ஆண்டின் 'வெளிப்படைத்தன்மையான நூல்கள் கொள்முதல் கொள்கை' விதிகளை மீறி, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்பட்ட புத்தகங்கள், பழைய நூல்களை வேறு தலைப்புகளிலும் போலி நூலாசிரியர்கள் பெயர்களிலும் அச்சிட்ட புத்தகங்கள் ஆகியவை கொள்முதல் செய்யப்பட்டதாகப் புகார்கள் எழுந்தன.
மேலும், போலிப் பதிப்பகங்கள் வாயிலாக பல கோடி ரூபாய் நிதி முறைகேடு நடைபெற்றதாகவும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. குறிப்பாக, 'அகல் விளக்கு பதிப்பகம்' மற்றும் அதன் உரிமையாளர் மோகன் ஆகியோர் மீது முக்கியக் குற்றச்சாட்டுகள் எழுந்தன.
இந்த விவகாரம் தீவிரமடைந்த நிலையில், ஓய்வுபெற்ற நீதிபதி ஹரிபரந்தாமன், எழுத்தாளர் எஸ்.வி.ராஜதுரை, ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி ஆர்.பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர், உயர்நீதிமன்றக் கண்காணிப்பில் தன்னிச்சையான விசாரணை ஆணையம் அமைக்க வேண்டும் என்று கூட்டறிக்கை வெளியிட்டனர்.
இதற்கிடையே, பொது நூலகத்துறை இயக்குநர் பொறுப்பிலிருந்த ஜெயந்தி விடுவிக்கப்பட்டார். மேலும், சர்ச்சைக்குரிய புத்தகக் கொள்முதல் ஆணைகளும் ரத்து செய்யப்பட்டன.
இதனைத் தொடர்ந்து, லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் கோவை பெரியார் அறிவுலக நூலக வளாகம் மற்றும் பொது நூலகத்துறை அலுவலகங்களில் சோதனை நடத்தி முக்கிய ஆவணங்களைப் பறிமுதல் செய்தனர்.
நூலகப் புத்தகக் கொள்முதல் தொடர்பாக ஏற்கனவே 2024-ம் ஆண்டு ஜூன் 19-ந்தேதி சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை பிறப்பித்த வழிகாட்டுதல்கள் மீறப்பட்டதாகக் கூறி, ராமசுப்பு என்பவர் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், எம்.டி.சுமதி ஆகியோர் அடங்கிய அமர்வு, முறைகேடு தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை உடனடியாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும் என்று உத்தரவிட்டது.
மேலும், முறைகேட்டில் தொடர்புடையதாகக் கூறப்படும் அகல் விளக்கு பதிப்பகம், அதன் உரிமையாளர் மோகன் மற்றும் தொடர்புடையவர்களின் வங்கிக் கணக்குகளை முடக்கவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
அரசு அதிகாரிகளின் துணையின்றி கோடிக்கணக்கான ரூபாய் ஊழல் நடைபெற்றிருக்க வாய்ப்பில்லை என்று குறிப்பிட்ட நீதிமன்றம், கடந்த 2 ஆண்டுகளில் புத்தகக் கொள்முதலில் தொடர்புடைய அனைத்து அதிகாரிகளின் விவரங்களையும் தாக்கல் செய்யவும், சம்பந்தப்பட்டவர்களைப் பணியிடை நீக்கம் செய்யவும் உத்தரவிட்டது.
நீதிமன்றத்தின் கண்டிப்பான உத்தரவுகளைத் தொடர்ந்து, கோவை பெரியார் அறிவுலக நூலகத்தில் அகல் விளக்கு, பீனிக்ஸ் ஆகிய பதிப்பகங்களின் 3,000-க்கும் மேற்பட்ட போலி நூல்கள் முதற்கட்டமாக அகற்றப்பட்டன.
இதையடுத்து, தமிழகம் முழுவதும் உள்ள அரசு நூலகங்களில் தீவிர ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வில் இதுவரை மொத்தம் 70,674 போலி நூல்கள் கண்டறியப்பட்டு, பொதுமக்களின் வாசிப்பிலிருந்து முழுமையாக அகற்றப்பட்டுள்ளதாக பொது நூலகத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.