சென்னை,
கோயம்பேடு மொத்த மார்க்கெட்டில் வெங்காயம் விலை 71 சதவீதம் உயர்வு அடைந்து ஒரு கிலோ வெங்காயம் ரூ.60-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெளி சந்தைகளில் கிலோ ரூ.80-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தமிழகத்தின் பிரதான காய்கறி மார்க்கெட்டாக விளங்கும் கோயம்பேடு மார்க்கெட்டில் வெங்காயத்தின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. கடந்த ஆகஸ்டு மாதத்தில் கிலோ ரூ.35-க்கு விற்பனை செய்யப்பட்ட முதல் ரக நாசிக் வெங்காயம், நேற்று ரூ.54 முதல் ரூ.60 வரை விற்பனையானது. ஆகஸ்டு மாத விலையுடன் ஒப்பிட்டால் 71.43 சதவீதம் விலை உயர்ந்துள்ளது.
அன்றாட சமையலில் தவிர்க்க முடியாத பொருளாக வெங்காயம் இருப்பதால், அதன் விலை உயர்வு பொதுமக்களிடம் உடனடியாக தாக்கத்தை ஏற்படுத்த ஆரம்பித்து உள்ளது. வரலாற்றிலும் வெங்காய விலை உயர்வு அரசியலில் முக்கிய பிரச்சினையாக உருவெடுத்த நிகழ்வுகள் உள்ளன.
இந்த விலை உயர்வுக்கு காரணம் என்ன என்பது குறித்து கோயம்பேடு வெங்காய மொத்த வியாபாரி ரகுநாத் கூறியதாவது:
கடந்த ஆண்டு வெங்காயத்துக்கு போதிய விலை கிடைக்காததால், மராட்டிய மாநிலத்தில் பல விவசாயிகள் இந்த ஆண்டு சாகுபடியை குறைத்துள்ளனர். மேலும், எத்தனால் தயாரிக்க கரும்புக்கான தேவை அதிகரித்துள்ளதால், மராட்டிய விவசாயிகளில் பலர் கரும்பு சாகுபடிக்கு மாறியதும் வெங்காய உற்பத்தி குறைவுக்கு காரணமாகியுள்ளது. நீண்ட நாட்கள் இருப்பு வைக்கக்கூடிய நாசிக் வெங்காயம் பிப்ரவரி, மார்ச் மாதங்களில் அறுவடை செய்யப்பட்டாலும், செப்டம்பர், அக்டோபர் வரை விற்பனைக்கு பயன்படுத்தப்படும். ஆனால், அதன் உற்பத்தி குறைந்துள்ளது. அதேபோல், ஆந்திரா, கர்நாடகாவில் விளையும் வெங்காயம் நீண்ட நாட்கள் சேமித்து வைக்க முடியாதது என்பதால், போதிய விலை கிடைக்காத காலங்களில் விவசாயிகள் சாகுபடியை குறைத்துள்ளனர்.
கோயம்பேட்டுக்கு மராட்டியத்தில் இருந்து தினமும் சுமார் 30 டன் வெங்காயம் ஏற்றிய 35 லாரிகள் வருவது வழக்கம். தற்போது 15 முதல் 18 லாரிகள் மட்டுமே வருகின்றன. பற்றாக்குறையை சமாளிக்க ஆந்திராவில் இருந்து 15 டன் கொள்ளளவு கொண்ட 8 முதல் 10 லாரிகளும், கர்நாடகாவில் இருந்து 10 முதல் 12 லாரிகளும் தினமும் வரவழைக்கப்படுகின்றன.
தற்போதைய விலையை தொடர்ந்து கவனித்த விவசாயிகள் கடந்த மாதமே புதிய வெங்காய சாகுபடியை தொடங்கியுள்ளனர். இவை சுமார் 90 நாட்களில் அறுவடைக்கு வரும் என்பதால் நவம்பர், டிசம்பர் இறுதியில் வரத்து அதிகரித்து விலை குறைய வாய்ப்புள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
கோயம்பேடு மொத்த மார்க்கெட்டில் நாசிக் வெங்காயம் நேற்று ரூ.60 வரை விற்றது. ஆந்திரா வெங்காயம் கிலோ ரூ.30 முதல் ரூ.40 வரையும், கர்நாடக வெங்காயம் ரூ.35 முதல் ரூ.50 வரையும் விற்பனையானது. சாம்பார் வெங்காயம் ரூ.60 முதல் ரூ.70 வரை விற்பனையானது. சில்லறை விலை கடைகளில் நாசிக் வெங்காயம் ரூ.70 முதல் ரூ.80 வரையும், ஆந்திரா, கர்நாடக வெங்காயம் ரூ.50 முதல் ரூ.60 வரையும் விற்பனையாகிறது. சாம்பார் வெங்காயம் ரூ.120-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெளிச்சந்தையில் வெங்காயம் கிலோ ரூ.50-க்கு விற்பனையானபோதே. ரேஷன் கடைகளில் ரூ.35-க்கு விற்பனை செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுத்தது. தற்போது ரேஷன் கடைகளில் வெங்காயம் விற்பனை செய்யப்படாத நிலையில், வெளிச்சந்தை விலை ரூ.80 வரை உயர்ந்துள்ளது. இதனால், விலை உயர்வை கட்டுப்படுத்த தமிழக அரசு மீண்டும் ரேஷன் கடைகள் மூலம் வெங்காயம் விற்பனை செய்யுமா? என்ற எதிர்பார்ப்பு பொதுமக்களிடையே ஏற்பட்டுள்ளது.
வெங்காய விலையைப்போலவே தக்காளி உள்பட அனைத்துவிதமான காய்கறிகளும் விலை உயர்ந்துள்ளன. புரட்டாசி மாதத்தில் பொதுமக்களின் அசைவம் தவிர்க்கும் வழக்கத்தாலும், காய்கறி உற்பத்தி மற்றும் வரத்து குறைவாலும் இந்த விலையேற்றம் காணப்படுகிறது. கோயம்பேடு மார்க்கெட்டில் நேற்றைய காய்கறி விலை (ஒரு கிலோவுக்கு) விவரம் வருமாறு:
தக்காளி- ரூ.40, உருளைக்கிழங்கு- ரூ.35, கேரட்- ரூ.50, பீன்ஸ்- ரூ.90, பீட்ரூட்- ரூ.50, சவ்-சவ்- ரூ.30, முள்ளங்கி- ரூ.30, முட்டைகோஸ்- ரூ.25. காலிபிளவர்- ரூ.25, வெண்டைக்காய்- ரூ.30, கத்திரிக்காய்- ரூ.30, பாகற்காய்- ரூ.50, புடலங்காய் ரூ.25, சுரைக்காய் ரூ.25, சேனைக்கிழங்கு- ரூ.40, முருங்கைகாய்- ரூ.40, வெள்ளரிக்காய்- ரூ.40, மிளகாய்- ரூ.30, இஞ்சி- ரூ.170-க்கு விற்பனை செய்யப்பட்டது.