தமிழக செய்திகள்

தமிழ்நாட்டில் அறிவிக்கப்பட்டபடி 717 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன டாஸ்மாக் நிர்வாகம் தகவல்

பள்ளி, கல்லூரி,பேருந்து நிலையம் அருகே உள்ள 717 டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என முதல்-அமைச்சர் விஜய் அறிவித்திருந்தார்.

சென்னை,

தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தால் 4,765 மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் தற்போது நடத்தப்பட்டு வருகிறது. அதில், வழிபாட்டுத் தலங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பேருந்து நிலையங்கள் அருகிலிருந்து 500 மீட்டர் வரை அமைந்துள்ள கடைகளை ஆய்வு செய்து கண்டறியுமாறு முதல்-அமைச்சர் விஜய் உத்தரவிட்டார்.

மேற்படி ஆணைக்கிணங்க இந்த மூன்று இனங்களில் 717 மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் செயல்பட்டு வருவது கண்டறியப்பட்டது.

பொதுமக்கள் நலனைக் கருத்தில்கொண்டு வழிபாட்டுத் தலங்கள் அருகிலுள்ள 276 கடைகள், கல்வி நிறுவனங்கள் அருகிலுள்ள 186 கடைகள் மற்றும் பேருந்து நிலையங்கள் அருகிலுள்ள 255 கடைகள் என மொத்தம் 717 மதுபான சில்லறை விற்பனைக் கடைகளை அடுத்த இரண்டு வாரத்துக்குள் மூட முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில், பள்ளிகள், கோவில்களுக்கு அருகில் இருந்த டாஸ்மாக் கடைகள் மற்றும் பொதுமக்களுக்கு இடையூறாக இருந்த டாஸ்மாக் கடைகள் என ஒவ்வொரு கடைகளாக மூடப்பட்டு தற்போது 717 டாஸ்மாக் கடைகளும் மூடப்பட்டுள்ளாதாக டாஸ்மாக் நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.