சென்னை,
முன்னாள் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது;-
“தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினுக்கும், எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலினுக்கும், எனக்கும் தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சி, குறிப்பாக தொழில் வளர்ச்சியை விட முக்கியமானது வேறொன்றும் இல்லை.
தமிழகத்தில் மேற்கொள்ளப்படும் ஒவ்வொரு முதலீடும், அமைக்கப்படும் ஒவ்வொரு தொழிற்சாலையும், உருவாக்கப்படும் ஒவ்வொரு வேலைவாய்ப்பும் எங்களுக்கு மகிழ்ச்சியையே தருகின்றன. ஆம், ஆட்சியில் எந்த அரசு இருந்தாலும் சரி.
அதனால்தான், இன்று அறிவிக்கப்பட்ட 97 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் (MoUs) குறித்த தகவல்களில் கூடுதல் வெளிப்படைத்தன்மை தேவைப்படுகிறது.இன்றைய தொழில்முனைவோர் மாநாட்டில் செய்தியாளர்கள் பங்கேற்க அனுமதிக்கப்படவில்லை என்பதே பலமான சந்தேகங்களை எழுப்புகிறது.
பல தசாப்தங்களாக தமிழ்நாட்டின் முதலீட்டு சூழலை முன்னிறுத்துவதில், சென்னையை சேர்ந்த வணிக செய்தியாளர்கள் மிக வலுவான பங்களிப்பை அளித்து வந்துள்ளனர். அப்படிப்பட்டவர்களை ஏன் இந்த மாநாட்டில் இருந்து விலக்கி வைத்தார்கள்? மேலும், அந்த 97 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் குறித்த அதிகாரப்பூர்வப் பட்டியல் ஏன் இன்னும் வெளியிடப்படவில்லை?
கிடைத்த தகவல்களை தொகுத்துப் பார்க்கையில் பின்வரும் உண்மைகள் தெரியவருகின்றன:-
• சுமார் 70 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் (மொத்த முதலீட்டு மதிப்பில் 75% மற்றும் வேலைவாய்ப்புகளில் 83%-ஐக் கொண்டவை) ஏற்கனவே இயங்கி வரும் நிறுவனங்களின் விரிவாக்கத் திட்டங்களாகவோ அல்லது முன்னாள் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் 'திராவிட மாடல்' அரசால் ஏற்கனவே முன்னெடுக்கப்பட்ட முதலீட்டு முயற்சிகளாகவோ உள்ளன.
• 'டைட்டன்' (Titan) நிறுவனத்துக்கான ₹1,000 கோடி மதிப்பிலான முதலீடு என்பது, TIDCO மூலமாக அந்த நிறுவனத்துடன் மாநில அரசுக்கு ஏற்கனவே உள்ள உறவின் அடிப்படையில் அமைந்ததாகும்.
• புதிய அல்லது புதிதாக அமையக்கூடிய முதலீடுகள் அனைத்தையும் தாராளமாக கணக்கில் கொண்டாலும், அவை மொத்தம் 24 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மட்டுமே; இது மொத்த முதலீட்டு மதிப்பில் சுமார் 23% மற்றும் வேலைவாய்ப்புகளில் 15% மட்டுமே ஆகும்.
நான் மிகத் தெளிவாக ஒன்றை சொல்ல விரும்புகிறேன், தொழில் விரிவாக்கம் வரவேற்கத்தக்கது. முதலீட்டு முயற்சியை இறுதி முதலீடாக மாற்றுவது வரவேற்கத்தக்கது. ஒவ்வொரு வேலைவாய்ப்பும் வரவேற்கத்தக்கது.
ஆனால், முந்தைய ஆட்சியின்போது உருவாக்கப்பட்ட, பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட அல்லது அறிவிக்கப்பட்ட ஒரு முதலீட்டை, வெறும் புதிய மாநாடு ஒன்றில் முன்வைக்கப்பட்டதற்காக மட்டும் 'புதிய சாதனை' என்று கூறிவிட முடியாது.
தி.மு.க. ஆட்சியில் இருந்தபோதெல்லாம் தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சி புதிய உச்சங்களை தொட்டிருந்தாலும், தமிழ்நாட்டின் தொழில் வெற்றி என்பது எந்தவொரு தனிப்பட்ட அரசியல் கட்சியின் சொத்தும் அல்ல; தி.மு.க.வும் இதை மதித்து வந்துள்ளது.
அதனால்தான், பன்முகத் திறமை கொண்ட நமது தொழில் சூழலமைப்பின் வலிமையையும், நமது தொழிலதிபர்கள் மற்றும் முதலீட்டாளர்களின் சிறப்புகளையும் நாங்கள் முன்னிலைப்படுத்தி பெருமை கொண்டோம்.
முந்தைய அரசு ஒரு தொழில் சூழலமைப்பை உருவாக்கியது, முதலீட்டாளர்களை ஈர்த்தது, புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டது, முதலீட்டு முயற்சிகளை வளர்த்தெடுத்தது மற்றும் நிறுவனங்கள் தங்கள் தொழிலை விரிவுபடுத்துவதற்கான சாதகமான சூழலை ஏற்படுத்திக் கொடுத்தது. தற்போதைய அரசு புதிதாக கொண்டுவரும் விஷயங்களை நியாயமான கண்ணோட்டத்துடன் அணுகுவதோடு, அது உண்மையில் செய்து முடித்தவற்றுக்கான அங்கீகாரத்தையும் வழங்க வேண்டும்.
இன்று ஒப்பந்தம் செய்துகொண்ட நிறுவனங்களின் பட்டியலை ஊடகங்களுக்கு வெளியிட வேண்டும். அவர்கள் அதை ஆய்வு செய்யட்டும். எது உண்மையாகவே புதியது, எது விரிவாக்கம் சார்ந்தது, எது ஏற்கனவே செயல்பாட்டில் இருந்தது என்பதை மக்கள் தெரிந்துகொள்ளட்டும்.
விளம்பரங்களில் கூறப்படுவது போல அந்த எண்கள் ஈர்க்கக்கூடியதாக இருந்தால், வெளிப்படைத்தன்மை அந்த சாதனையை மேலும் வலுப்படுத்தும். தமிழ்நாடு இதற்கு சற்றும் குறைவானதை ஏற்காது. தமிழ்நாட்டின் வளர்ச்சி மீது நம்பிக்கை கொள்வோம்.”
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.