தமிழக செய்திகள்

7.5 சதவீத இடஒதுக்கீடு: அரசு பள்ளி மாணவர்கள் போனபைட் சான்றிதழை இணைக்க தேவையில்லை

மாணவர்களின் தகுதி மற்றும் விவரங்கள் பள்ளி கல்வி மேலாண்மை தகவல் அமைப்பு வாயிலாக உறுதி செய்துகொள்ளப்படும்.

சென்னை,

அரசு மருத்துவக் கல்லுாரிகளில், 7.5 சதவீத ஒதுக்கீட்டில் சேரும் அரசு பள்ளி மாணவர்கள், தாங்கள் படித்த பள்ளிகளில், உண்மைத்தன்மை (போனபைட்) சான்றிதழ் பெற்று விண்ணப்பிக்க வேண்டும். இது அந்த பள்ளியில் மாணவர் படித்தார் என்பதை உறுதி செய்யக்கூடியது.இந்த நிலையில் இந்த உண்மைத் தன்மை சான்றிதழ் தேவையில்லை என்று மருத்துவக் கல்வி இயக்குனரகம் தெரிவித்துள்ளது.

போனபைட் சான்றிதழ்

இதுதொடர்பாக மருத்துவக் கல்வி இயக்குனரகத்தின் மருத்துவ மாணவர் தேர்வு குழு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 'மருத்துவ படிப்பில், 7.5 சதவீத ஒதுக்கீட்டில் சேரும் மாணவர்களில், 2022-23-ம் ஆண்டு மற்றும் அதற்கு பிந்தைய ஆண்டுகளில், பிளஸ்-2 படித்த மாணவர்கள் விண்ணப்பத்தில், 'போனபைட்' சான்றிதழ் இணைக்க தேவையில்லை. அவர்களது தகுதி மற்றும் விவரங்கள், பள்ளி கல்வித்துறையின், பள்ளி கல்வி மேலாண்மை தகவல் அமைப்பு வாயிலாக உறுதி செய்துகொள்ளப்படும்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.