விருதுநகர்,
விருதுநகர் மாவட்டம் சிவகாசி ஐயப்பன் காலனியில் அச்சக உரிமையாளர் குடும்பத்துடன் ஹோட்டலுக்கு சென்றிருந்த நேரத்தில், வீட்டின் பூட்டை உடைத்து புகுந்த முகமூடி அணிந்த கொள்ளையர்கள் 75 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ.10 ஆயிரம் பணத்தை கொள்ளையடித்து தப்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிவகாசியைச் சேர்ந்த அரவிந்த் ராம் (40), அச்சகம் மற்றும் சூப்பர் மார்க்கெட் நடத்தி வருகிறார். நேற்று இரவு குடும்பத்தினருடன் உணவருந்தச் சென்ற அவர், நள்ளிரவு வீட்டிற்கு திரும்பியபோது கதவு திறந்து கிடந்தது. அப்போது வீட்டிலிருந்து அரிவாளுடன் வெளியே வந்த முகமூடி அணிந்த மூன்று பேர், அவரை அரிவாளைக் காட்டி மிரட்டிவிட்டு, வெளியே காத்திருந்த காரில் தப்பிச் சென்றனர்.
பின்னர் வீட்டை சோதனையிட்டதில், பீரோவில் இருந்த 93 பவுன் நகைகள் மற்றும் ரூ.10 ஆயிரம் பணம் திருடப்பட்டிருந்தது. தப்பிச் செல்லும் போது 18 பவுன் நகைகள் கீழே விழுந்ததால், மொத்தம் 75 பவுன் நகைகளை கொள்ளையர்கள் எடுத்துச் சென்றதாக தெரியவந்துள்ளது.
தகவலறிந்த சிவகாசி நகர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தடயவியல் நிபுணர்கள், மோப்ப நாய் உதவியுடன் விசாரணை மேற்கொள்ளப்பட்டதுடன், மதுரை சரக டிஐஜி அபிநவ் குமார் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கவுதம் கோயல் ஆகியோரும் சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டனர். தப்பியோடிய கொள்ளையர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.