சென்னை,
சென்னையில் 2-ம் கட்டமாக 750 ஏ.சி. மின்சார பஸ் சேவையை முதல்-அமைச்சர் விஜய் இன்று (செவ்வாய்கிழமை) தொடங்கிவைக்கிறார்.
சென்னையில் சுற்றுச்சூழல் மாசுபாட்டைக் குறைக்கும் நோக்கத்தில், சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தின் சார்பில் முதல் கட்டமாக ரூ.697 கோடி மதிப்பீட்டில் 625 தாழ்தள மின்சார பஸ்கள் வியாசர்பாடி, பெரும்பாக்கம், பூந்தமல்லி, சென்டிரல் பணிமனை மற்றும் தண்டையார்பேட்டை-1 ஆகிய 5 பணிமனைகளில் இருந்து இயக்கப்பட்டு வருகிறது.
இதனைத் தொடர்ந்து, 2-ம் கட்டமாக 750 புதிய தாழ்தள குளிர்சாதன மின்சார பஸ்கள் ஆலந்தூர், சென்டிரல் பணிமனை-2, பெரம்பூர், பாடியநல்லூர், ஆவடி, கே.கே.நகர் மற்றும் அய்யப்பன்தாங்கல் ஆகிய 7 பணிமனைகளில் இருந்து இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதில், முதன் முதலாக ஆலந்தூர் பணிமனையில் இருந்து 130 ஏ.சி. மின்சார பஸ்கள் இயக்கப்பட உள்ளன. இந்த மின்சார பஸ்கள் இயக்கத்தை முதல்-அமைச்சர் விஜய் சென்னை தலைமைச் செயலகத்தை இருந்தபடி இன்று (செவ்வாய்கிழமை) தொடங்கி வைக்கிறார். மேலும், சென்னை தலைமைச் செயலக வளாகத்தில் இருந்து 5 மின்சார பஸ்களை முதல்-அமைச்சர் விஜய் கொடியசைத்து தொடங்கிவைக்கிறார்.