தமிழக செய்திகள்

கழிவுமீன் ஆலைகளை மூடக்கோரி 751-வது நாள் போராட்டம்: புதிய அரசு மீது பொட்டலூரணி மக்கள் நம்பிக்கை

தமிழக அமைச்சர் மதன்ராஜா பொட்டலூரணி கழிவுமீன் ஆலைகளை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்டம் கருங்குளம் ஒன்றியம், எல்லைநாயக்கன்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட பொட்டலூரணி, நான்கு கிராமங்களையும் 9 வார்டுகளையும் கொண்ட கிராமமாக திகழ்கிறது. இந்த கிராமத்தைச் சுற்றி அமைந்துள்ள 3 மீன் கழிவு ஆலைகளில் இருந்து தொடர்ந்து வீசும் கடுமையான துர்நாற்றம் மற்றும் விஷ வாயுக்கள் காரணமாக இப்பகுதியில் வாழ முடியாத சூழ்நிலை உருவாகியுள்ளதாக மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

751-வது நாளாக போராட்டம்:

இதனால் குழந்தைகளுக்கு மூச்சுத்திணறல் உள்ளிட்ட கடுமையான உடல்நல பாதிப்புகள் ஏற்படுவதுடன், உள்ளூர் விவசாயமும் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டுகின்றனர். இதுகுறித்து தங்களது கோரிக்கைகளை கடந்த 7 ஆண்டுகளாக அரசுக்கு வைத்தும் எவ்வித நடடிவக்கையும் எடுக்கப்படாததால், கடந்த 751 நாட்களாக மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

பொதுமக்கள் குற்றச்சாட்டு:

கடந்த தி.மு.க. ஆட்சிக் காலத்தில் இந்த கோரிக்கைக்காக மனு அளித்த கிராம மக்கள் மீது பல்வேறு பொய் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, மக்கள் ஒடுக்கப்பட்டதாக போராட்டக் குழுவினர் தெரிவிக்கின்றனர். மேலும் கடந்த ஆட்சியில் அமைச்சராக இருந்த அனிதா ராதாகிருஷ்ணன் இக்கிராம மக்களை வன்மத்துடன் நடத்தியதுடன், ஆலைகள் இயங்குவதற்கு பின்னணியாக செயல்பட்டார் என்றும் பொதுமக்கள் பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளனர்.

அமைச்சர் நடவடிக்கை எடுக்க மக்கள் வலியுறுத்தல்:

தற்போது தமிழ்நாட்டில் புதிய அரசு அமைந்துள்ள நிலையில், தங்களுக்கு விடிவு பிறக்கும் என பொட்டலூரணி மக்கள் பலத்த நம்பிக்கை தெரிவித்துள்ளனர். குறிப்பாக தற்போது புதிதாகப் பொறுப்பேற்றுள்ள இந்த தொகுதியின் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினரும், மாநில அமைச்சருமான மதன்ராஜா இந்த விவகாரத்தில் முழு கவனம் செலுத்தி, மக்களின் நல்வாழ்வுக்கு எதிராக செயல்படும் ஆலைகளை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

அடிப்படை வசதிகள் செய்துதர கோரிக்கை:

மேலும் கடந்த காலப் போராட்டங்களின் போது பொதுமக்கள் மீது பழிவாங்கும் நோக்கில் போடப்பட்ட அனைத்து பொய் வழக்குகளையும் உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்றும், கிராமத்திற்கு தேவையான அடிப்படை வசதிகளை முழுமையாக செய்து தர வேண்டும் என்றும் தங்களது கோரிக்கைகளை மக்கள் முன்வைத்துள்ளனர்.