தூத்துக்குடி தாளமுத்துநகர் கடற்கரை பகுதியில் போதைப்பொருள் கடத்தல் தடுப்பு நடவடிக்கையாக, மத்திய போதைப்பொருள் புலனாய்வுப் பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் அருண்குமார் தலைமையிலான அதிகாரிகள் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகப்படும்படி சுற்றித்திரிந்த 3 பேரை பிடித்து போலீசார் விசாரணை செய்தனர்.
விசாரணையில் அவர்கள் விருதுநகர் மாவட்டம், திருத்தங்கலைச் சேர்ந்த ரமேஷ்நாதன் (வயது 39), தூத்துக்குடி திரேஸ்புரத்தைச் சேர்ந்த சசிகுமார்(37), காயல்பட்டினம் சிங்கித்துறையைச் சேர்ந்த சிலுவைபிரின்ஸ்(20) என்பது தெரியவந்தது. அவர்களிடம் நடத்திய சோதனையில், சர்வதேசச் சந்தையில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள 76 கிலோ கஞ்சா ஆயில் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து அந்த போதைப்பொருள் எண்ணெய்யைப் பறிமுதல் செய்த அதிகாரிகள், அந்த 3 பேரையும் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்கள் தூத்துக்குடி குற்றவியல் நீதித்துறை நடுவர் மன்றம் எண்: 3-ல் ஆஜர்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த சம்பவம் தூத்துக்குடி கடலோரப் பகுதிகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.