சென்னை,
இந்திய கடலோர காவல் படை மற்றும் வியட்நாம் கடலோர காவல் படைக்கு இடையிலான ஏழாவது சுற்று உயர்மட்டக் கூட்டம் இன்று (25 ஆகஸ்ட் 2026) சென்னையில் நடைபெற்றது.
வியட்நாம் கடலோரக் காவல் படை (VCG) குழுவினர் சென்னைக்கு பயணம் மேற்கொண்டுள்ளனர். அதன் ஒரு பகுதியாக, வியட்நாம் கடலோர காவல் படையின் துணைத் தளபதி மேஜர் ஜெனரல் லுவோங் டின் ஹங் (Luong Dinh Hung), இந்திய கடலோர காவல் படையின் தலைமை இயக்குநர் பரமேஷ் சிவமணி AVSM, PTM, TM அவர்களை சந்தித்துப் பேசினார்.
இச்சந்திப்பை தொடர்ந்து, சென்னையிலுள்ள கடலோர காவல் படை மண்டலத் தலைமையகத்தில் இருநாட்டு கடலோரக் காவல் படைகளுக்கிடையிலான 7-வது உயர்மட்டக் கூட்டம் நடைபெற்றது. இந்தியக் கடலோர காவல் படை குழுவிற்கு அதன் தலைமை இயக்குநர் பரமேஷ் சிவமணி AVSM, PTM, TM தலைமை தாங்கினார்; வியட்நாம் கடலோரக் காவல் படை குழுவிற்கு மேஜர் ஜெனரல் லுவோங் டின் ஹங் தலைமை தாங்கினார்.
இருநாட்டு கடலோர காவல் படைகளுக்கிடையிலான ஒத்துழைப்பை மேம்படுத்துதல், ஒருங்கிணைந்து செயல்படுதல், கடல்சார் செயல்பாடுகளை வலுப்படுத்துதல் ஆகியவை குறித்து இக்கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டன.
சிறந்த கடல்சார் சூழலை உறுதி செய்வதற்குரிய செயல்பாடுகளை தொடர்ந்து கூட்டாக மேற்கொள்தல், இருதரப்பு ஒத்துழைப்பு மேம்பாடு ஆகியவற்றின் மீதான தங்கள் உறுதிப்பாட்டை இரு தரப்பினரும் இக்கூட்டத்தில் வலியுறுத்தினர்.