சென்னை,
திருச்சி அருகே திருவிழாவுக்கு சென்றுவிட்டு ஆம்னி வேனில் ஊர் திரும்பியபோது, வேன் மரத்தில் மோதி ஏற்பட்ட கோர விபத்தில் 8 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பா.ஜ.க. மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-
திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் கார் கட்டுப்பாட்டை இழந்து வேப்பமரத்தில் மோதி ஏற்பட்ட கோர விபத்தில் 8 பேர் உயிரிழந்தனர் என்ற துயரச் செய்தி மிகுந்த மனவேதனையையும் அதிர்ச்சியையும் அளிக்கிறது.
இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். அவர்களின் ஈடுசெய்ய முடியாத இழப்பைத் தாங்கும் மனவலிமையை எல்லாம் வல்ல இறைவன் வழங்கப் பிரார்த்திக்கிறேன்.
மேலும், இவ்விபத்தில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்கள் விரைவில் பூரண நலம் பெற்று மீண்டு வர இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.