சென்னை,
முசிறி அருகே சாலை விபத்தில் 8 பேர் பலியான செய்தி அறிந்து மிகுந்த வருத்தமும், வேதனையும் அடைந்ததாக முதல்-அமைச்சர் விஜய் தெரிவித்துள்ளார்.
தஞ்சாவூர் மாவட்டம் ராயந்தூரை சேர்ந்தவர் மாணிக்கராஜ். அப்பகுதியில் மளிகைக் கடை நடத்தி வரும் இவர், தனது நண்பர்கள் 9 பேருடன் தனக்கு சொந்தமான ஆம்னி வேனில் நாமக்கலில் நடைபெற்ற திருவிழாவிற்கு சென்றுள்ளார். விழா முடிந்து இன்று பிற்பகல் 4 மணியளவில் துறையூர் வழியாக அவர்கள் ஊர் திரும்பிக்கொண்டிருந்தனர்.
அப்போது, திருச்சி ஜம்புநாதபுரம் அருகே வந்துகொண்டிருந்தபோது, இடதுபுறமாக சென்ற வேன் திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து வலதுபுறமாக பாய்ந்து, சாலையோரமிருந்த மரத்தில் பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் வேனில் பயணித்த 5 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். பலத்த காயமடைந்த 5 பேர் உடனடியாக மீட்கப்பட்டு, அருகிலுள்ள அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து ஜம்புநாதபுரம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதிவேகமாக வாகனத்தை இயக்கியதே விபத்திற்குக் காரணம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 5 பேரில் மேலும் 3 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததால் பலி எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது.
இந்நிலையில் முசிறி அருகே கார் மரத்தில் மோதிய விபத்தில் 8 பேர் பலியான துயரமான செய்தி அறிந்து மிகுந்த வருத்தமும், வேதனையும் அடைந்ததாக முதல்-அமைச்சர் விஜய் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் வலைதளத்தில் அவர் கூறியிருப்பதாவது:-
திருச்சிராப்பள்ளி மாவட்டம், துறையூர் - முசிறி நெடுஞ்சாலையில் கொத்தூர்பட்டி நால்ரோடு அருகில் இன்று (22.11.2026) மாலை கார் மரத்தில் மோதிய விபத்தில், அக்காரில் பயணம் செய்த தஞ்சாவூர் மாவட்டம், திருக்காட்டுப்பள்ளி, மகாராஜபுரத்தைச் சேர்ந்த ஆ.சக்திவேல் (வயது 45) உள்ளிட்ட ஐந்து நபர்கள் நிகழ்விடத்திலேயும், படுகாயங்களுடன் முசிறி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி மூன்று நபர்களும் என மொத்தம் 8 நபர்கள் உயிரிழந்தனர் என்ற துயரமான செய்தி அறிந்து மிகுந்த வருத்தமும், வேதனையும் அடைந்தேன்.
இவ்விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், அவரது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.
மேலும், இவ்விபத்தில் படுகாயமடைந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் இரண்டு நபர்களுக்கு உயரிய சிகிச்சை வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.