சென்னை,
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் புதிய பயனாளிகள் சேர முடியாது எனவும், 80 லட்சம் பெண்கள் இத்திட்டத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளதாகவும் சமூக வலைதளங்களில் ஒரு தகவல் பரப்பப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இது முற்றிலும் தவறான தகவல் என்று தமிழக அரசின் தகவல் சரிபார்ப்பகம் விளக்கம் அளித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் 1.31 கோடி பெண்கள் பயனடைந்து வருகிறார்கள். கடந்த மே மாதத்திற்கான வரவும் பயனாளர்களின் வங்கி கணக்கில் வைக்கப்பட்டது.
இந்த நிலையில், மராட்டிய மாநிலத்தில் 80 லட்சம் பெண்கள் மகளிர் உதவித்தொகை திட்டத்திலிருந்து நீக்கப்பட்டதாக ஊடகங்களில் வெளியான செய்தியைத் திரித்து, தமிழ்நாட்டில் மகளிர் உரிமைத் தொகை திட்டத்திலிருந்து பெண்கள் நீக்கப்பட்டுள்ளதாகத் தவறான தகவல் பரப்பப்பட்டு வருகிறது. தமிழ்நாடு அரசு இதுபோன்று எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.