ராமேசுவரம்,
இலங்கை நீர்க்கொழும்பு கடலில் ரோந்து பணியில் இருந்த இலங்கை கடற்படையினர், இலங்கைக்கு கடத்திய 800 கிலோ பீடி இலைகளை பறிமுதல் செய்து 2 பேரை கைது செய்தனர்.
ராமேசுவரம், தனுஷ்கோடி உள்பட ராமநாதபுரம் மாவட்ட கடல் பகுதி வழியாக இலங்கைக்கு கஞ்சா, ஹெராயின், பீடி இலை, கடல் அட்டை, மஞ்சள், ஏலக்காய், மருந்து என பலவிதமான பொருட்கள் கடத்தப்படுகின்றன.
இந்த நிலையில் இலங்கை நீர்க்கொழும்பு கடலில் ரோந்து பணியில் இருந்த இலங்கை கடற்படையினர் படகு ஒன்றை நிறுத்தி சோதனை செய்தனர். அந்த படகில் 21 சாக்கு பைகளில் இருந்த 800 கிலோ பீடி இலை மூட்டைகளை பறிமுதல் செய்தனர். அந்த மூட்டைகளை இலங்கைக்கு கடத்தி வந்ததாக அந்நாட்டை சேர்ந்த 2 பேரை கைது செய்தனர்.
பீடி இலை மூட்டைகள் ராமநாதபுரம் மாவட்ட கடல் பகுதியில் இருந்து கடத்தப்பட்டதா? அல்லது தூத்துக்குடியில் இருந்து கடத்தப்பட்டதா? என்பது குறித்து உளவு பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.