தமிழக செய்திகள்

தூத்துக்குடியில் 800 கிலோ வெடி பொருட்கள் பறிமுதல்: போலீஸ் விசாரணை

பசுவந்தனை பகுதியில் ஒரு அறையில் சட்ட விரோதமாக பதுக்கி வைத்திருந்த 300 கிலோ கரி மருந்து, 200 கிலோ கரித்தூள், 300 கிலோ திரியுடன் கூடிய மருந்து குப்பி ஆகியவற்றை கைப்பற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

தூத்துக்குடி மாவட்டம், பசுவந்தனை காவல் நிலைய போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் நேற்று லக்கமாள் தேவி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அப்பகுதியில் உள்ள காட்டுப் பகுதியில் ஆஸ்பெட்டாஸ் செட் அமைத்து அதில் சட்டவிரோதமாக பட்டாசு தயாரிக்கப் பயன்படும் கரிமருந்துகள் மற்றும் பட்டாசு தயார் செய்யும் பொருட்கள் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.

இதையடுத்து மேற்சொன்ன காவல்துறையினர் உடனே அந்த அறையில் இருந்த சுமார் 300 கிலோ கரி மருந்து, 200 கிலோ கரித்தூள், 300 கிலோ திரியுடன் கூடிய மருந்து குப்பி ஆகியவற்றை கைப்பற்றி வழக்குப்பதிவு செய்து இதில் தொடர்புடையவர்கள் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் அனுமதியின்றி சட்டவிரோதமாக பட்டாசு தயாரிக்க பயன்படுத்தப்படும் வெடி மருந்துகள், பட்டாசுகள் ஆகியவற்றை பதுக்கி வைத்திருந்தாலோ, பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்டாலோ அவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தூத்துக்குடி மாவட்ட காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

மேலும் முறையான அனுமதியுடன் செயல்படும் பட்டாசு தயாரிக்கும் தொழிற்சாலைகளில் பாதுகாப்பு விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என மாவட்ட காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.