சென்னை,
தமிழ்நாட்டில் ரவுடிகள், போதைப் பொருட்கள் ஒழிப்பு நடவடிக்கையில் போலீசார் கவனம் செலுத்த வேண்டும் என்று முதல்-அமைச்சர் விஜய் அறிவுறுத்தி உள்ளார். இதைத்தொடர்ந்து போலீசார் நடத்திய சோதனை வேட்டையில் கடந்த 3 நாட்களில் மட்டும் 844 ரவுடிகளும், போதைப் பொருள் குற்றவாளிகள் 419 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுகுறித்து தமிழக போலீஸ் டி.ஜி.பி. அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
“மாநிலத்தில் வசித்து வரும் பொதுமக்களின் நலன் கருதி அமைதியான, பொதுமக்களுக்கு பாதுகாப்பான ஒரு சூழ்நிலையை உறுதி செய்ய வேண்டும் என்ற முதல்-அமைச்சரின் ஆணைக்கிணங்க ரவுடிகளையும், போதை மருந்துப் பொருட்கள் பயன்பாடு மற்றும் இதர மனமயக்கப் போதைப் பொருட்களின் பயன்பாட்டினை சமூகத்திலிருந்து துடைத்தெறிய வேண்டும் என்று காவல் துறை உறுதி பூண்டுள்ளது.
கடந்த 3 நாட்களில் 15,349 ரவுடிகள் (12,650 வரலாற்றுப் பதிவேட்டில் உள்ளவர்கள்) அடையாளம் காணப்பட்டு சோதனை மற்றும் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இதில் வரலாற்றுப் பதிவேடு ரவுடிகள் 488 பேர், வரலாற்று பதிவுறா ரவுடிகள் 356 பேர் என 844 ரவுடிகள் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டனர்.
போதைப் பொருட்கள் மற்றும் மனமயக்கப் பொருட்கள் சட்டத்தின் கீழ் 294 வழக்குகள் மாநிலம் முழுவதும் பதிவு செய்யப்பட்டு 419 போதைப்பொருள் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், வெளிச்சந்தையில் ரூ.1 கோடியே 42 லட்சத்து 78 ஆயிரம் மதிப்பிலான 267 கிலோ கஞ்சா மற்றும் 2,476 போதை மருந்து மாத்திரைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
ரவுடிகள் மற்றும் போதைப்பொருள் குற்றவாளிகளின் நடவடிக்கைகளைக் கண்காணித்தல், அவர்களுடைய குழு செயல்பாடுகளைக் குலைத்தல் மற்றும் ரவுடிகளின் நடவடிக்கைகளைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருதல் மற்றும் மாநிலத்தின் எந்தவொரு பகுதியிலும் திட்டமிட்டு குற்றச் செயல்களில் ஈடுபடுகின்ற அமைப்புகளைக் போன்ற குற்றவாளிகளுக்கு எதிராக எடுக்கப்பட்டு வருகின்ற முனைப்பான, தொய்வில்லாத நடவடிக்கைகள் தமிழ்நாடு காவல் துறையின் தொடர் நடவடிக்கைகளின் ஓர் அங்கமாகும்.
பொது அமைதி மற்றும் மக்களுக்கு பாதுகாப்பான சூழலை உறுதி செய்தல் மற்றும் அனைத்து வகையிலான குற்றச் செயல்கள் மற்றும் சமூக விரோதச் செயல்களுக்கு எதிராக உரிய சட்டப்படியான நடவடிக்கைகளை எடுக்க தமிழ்நாடு காவல் துறை உறுதி பூண்டுள்ளது.”
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.