சென்னை,
தமிழகத்தில் கடந்த ஒரிரு தினங்களுக்கு முன்பு ஆங்காங்கே ஆலங்கட்டி மழை மற்றும் சூறைக்காற்றுடன் மழை பெய்தது. இந்த மழையில் வேளாண் மற்றும் தோட்டக்கலை பயிர்கள் பாதிப்படைந்திருந்தன. இந்த நிலையில் 9 மாவட்டங்களில் மழையால் பாதிக்கப்பட்ட வேளாண் பயிர்களை கணக்கெடுப்பு பணி தொடங்கப்பட்டுள்ளது.
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:-
மதுரை, சேலம் மற்றும் தென்காசி மாவட்டங்களில் கடந்த சில நாட்க ளுக்கு முன்பு திடீரென பெய்த ஆலங்கட்டி மழையினால் சுமார் 810 எக் டேரில் சாகுபடி செய்யப்பட்டிருந்த நெல், எண்ணெய் வித்துகள், சிறுதானியங்கள், பருத்தி, கரும்பு ஆகிய வேளாண் பயிர்கள் பாதிப்படைந்துள்ளன.
கோவை, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, மதுரை, நாமக்கல், சேலம், திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் சூறைக்காற்றுடன் பெய்த மழையினால் சுமார் 40 எக்டேரில் சாகுபடி செய்யப்பட்ட வாழை, சின்ன வெங்காயம், முருங்கை, தென்னை, மலர்கள் ஆகிய தோட்டக்கலைப் பயிர்கள் பாதிப் படைந்துள்ளன. மொத்தம் 850 எக்டேரில் சாகுபடி செய்யப்பட்ட பயிர்கள் பாதிக்கப்பட்டதாக முதற்கட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் ஆலங்கட்டி மழையினால் அறுவடைப் பருவத்திலுள்ள நெற்பயிர் அதிக அளவில் பாதிப்புக்குள்ளாகியுள்ளது. இதனைத்தொடர்ந்து, பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் வருவாய் மற்றும் வேளாண்மைத்துறை இணைந்து கணக்கெடுப்பு செய்து பாதிக்கப்பட்ட பயிர் பரப்பினை உறுதிசெய்து அறிக்கை அனுப்பிட அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.