தமிழக செய்திகள்

தமிழக அரசின் சிறப்பு பிரதிநிதி வீட்டில் 87.5 சவரன் நகை திருட்டு: பெண்-சகோதரர்களுக்கு சிறை தண்டனை

தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி ஏ.கே.எஸ்.விஜயனின் தஞ்சையில் உள்ள வீட்டில் 87.5 சவரன் தங்க நகைகள் திருட்டு போயின.

தஞ்சாவூர்,

தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி ஏ.கே.எஸ்.விஜயனின் தஞ்சையில் உள்ள வீட்டில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 87.5 சவரன் தங்க நகைகள் திருட்டு போயின. அவரது மனைவி ஜோதிமணி வீட்டை பூட்டிவிட்டு வெளியூர் சென்றிருந்த நேரத்தில், வீட்டின் பூட்டை உடைத்து இந்த துணிகர கொள்ளை அரங்கேறியது.

இந்த வழக்கு தொடர்பாக தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக போலீசார் 3 தனிப்படைகள் அமைத்து தர்மபுரியைச் சேர்ந்த சகோதரர்களான மொய்தீன் (வயது 37), ஷாஜகான்(28) மற்றும் அவர்களது சகோதரி ஆயிஷாபர்வீன்(30) ஆகிய 3 பேரை கைது செய்து நகைகளை மீட்டனர்.

இந்த வழக்கின் விசாரணை தஞ்சை முதலாவது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நடைபெற்று வந்த நிலையில், நேற்று நீதிபதி பிரபுராம் தீர்ப்பு வழங்கினார். இதில் குற்றவாளிகளான மொய்தீன் மற்றும் ஷாஜகானுக்கு தலா 6 ஆண்டுகள் சிறை தண்டனையும், தலா ரூ.50 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது. இவர்களுக்கு உடந்தையாக இருந்த ஆயிஷாபர்வீனுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.50 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.

SCROLL FOR NEXT