தமிழக செய்திகள்

ஜெம் வீரமணி மீது 8-வது வழக்குப்பதிவு

வழக்கில் சம்பந்தப்பட்ட 5 பேர் வெளிநாடு தப்பிச் செல்லாமல் இருக்க லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பட்டுள்ளது.

சென்னை,

பாதிக்கப்பட்ட சிறுமிகளின் வாக்குமூலங்களின் அடிப்படையில், ஜெம் வீரமணி மீது தற்போது 8-ஆவது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

சிறுமிகளை சீரழித்த 84 வயதான தொழில் அதிபர் ஜெம் வீரமணி 'போக்சோ' சட்டத்தின் கீழ் கைது செய்து புழல் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். அவர் மீது குண்டர் தடுப்பு சட்டமும் பாய்ந்தது. அவருக்கு உடந்தையாக இருந்த சாந்தி என்ற பெண் அவரது கணவர் மகேந்திர சிம்ஹனுடன் கைது செய்யப்பட்டார்.

வீரமணி சிறுமிகளுடன் சில்மிஷத்தில் ஈடுபட்ட வீடியோ காட்சிகளை வைத்திருந்தும் போலீசாருக்கு தகவல் தெரிவிக்காத வீரமணியின் முன்னாள் உதவியாளர் கணேசன் மற்றும் சிறுமிகளை அழைத்து வந்த டிரைவர்கள் லாசர், பார்த்திபன் மற்றும் பாபு ஆகியோர் மீதும் அடுத்தடுத்து கைது நடவடிக்கை எடுக்கப்பட்டது.

சமீபத்தில் ஜெம் வீரமணியிடம் 2 நாட்கள் போலீஸ் காவலில் விசாரணை நடத்தப்பட்டது. அவரிடம் 200 கேள்விகளை எழுப்பி 14 மணி நேரம் இந்த விசாரணை நடைபெற்றது.

இந்த வழக்கில் அடுத்தடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பு பொதுமக்கள் மத்தியில் இருந்து வருகிறது. எனவே அந்த வழக்கை விசாரிக்கும் சிறப்புப் புலனாய்வு குழுவினருக்கு விசாரணையின் முன்னேற்றம் குறித்து வாரந்தோறும் அதிகாரப்பூர்வமாக செய்திக்குறிப்பு வெளியிட வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

இதைத்தொடர்ந்து இந்த வழக்கின் ஒவ்வொரு நகர்வுகள் குறித்தும் சிறப்புப் புலனாய்வு குழுவினர் வாரந்தோறும் செய்திக்குறிப்பு வெளியிடுகின்றனர். ஜெம் கிரானைட்ஸ் உரிமையாளர் வீரமணிக்கு எதிரான பாலியல் குற்றச்சாட்டுகள் நாளுக்கு நாள் பூதாகரமாகி வருகின்றன. அதன்படி இன்றும் செய்திக்குறிப்பு வெளியிடப்பட்டது. அதில்,

* இதுவரை 12 சிறுமிகள் அளித்த புகார்களின் அடிப்படையில் வீரமணி மற்றும் அவரது நண்பர்கள் மீது காவல்துறை தீவிர சட்டப்பூர்வ நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளது.

* பாதிக்கப்பட்ட சிறுமிகளின் வாக்குமூலங்களின் அடிப்படையில், வீரமணி மீது தற்போது 8-ஆவது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

* வழக்கில் சம்பந்தப்பட்ட 5 பேர் வெளிநாடு தப்பிச் செல்லாமல் இருக்க லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

* விரைவில் புலன் விசாரணை முடிக்கப்பட்டு, நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்படும் என சிறப்பு விசாரணைக் குழு தெரிவித்துள்ளது

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT