சென்னை,
தமிழக வரலாற்றில் தவிர்க்க முடியாத ஆளுமையாக விளங்கிய முன்னாள் முதல்-அமைச்சரும், தி.மு.க. முன்னாள் தலைவருமான கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு நாள் இன்று (வெள்ளிக்கிழமை) அனுசரிக்கப்படுகிறது
திருவாரூர் திருக்குவளையில் 1924 ஜூன் 3-ம் தேதி பிறந்தவர் கலைஞர் கருணாநிதி. 1957 முதல் 2018 வரை தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினர், 40 ஆண்டுகள் தி.மு.க. தலைவர், ஐந்து முறை தமிழகத்தின் முதல்-அமைச்சர் என்று அசைக்க முடியாத ஆட்சி புரிந்தவர். கடந்த 2018-ம் ஆண்டு ஆகஸ்ட் 7 ஆம் தேதி கலைஞர் கருணாநிதி காலமானார். கருணாநிதியின் 8வது நினைவுநாளையொட்டி, திமுக தொண்டர்களும் அரசியல் பிரமுகர்களும் இன்று அவரை நினைவுகூர்ந்து வருகின்றனர்.
இந்நிலையில் கலைஞர் கருணாநிதி நினைவுநாளையொட்டி தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, முதன்மைச் செயலாளர், துணைப் பொதுச்செயலாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ள அமைதிப் பேரணி, இன்று காலை சென்னை, அண்ணாசாலை, ஓமந்தூரார் வளாகத்தில் அமைந்துள்ள கலைஞர் சிலை அருகிலிருந்து புறப்பட்டது. இதனைத்தொடர்ந்து காமராஜர் சாலையில் அமைந்துள்ள கலைஞர் நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்துகிறார் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின்.
இந்த அமைதிப் பேரணியில், முன்னாள் அமைச்சர் பெருமக்கள், மாவட்டக் கழகச் செயலாளர்கள், இந்நாள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், தலைமைக் கழக செயலாளர்கள், தலைமை செயற்குழு , பொதுக்குழு உறுப்பினர்கள், மாவட்டக் கழக, பகுதிக் கழக, வட்டக் கழக நிர்வாகிகள், மாநகராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் தி.மு.க.வின் பல்வேறு அணிகளைச் சேர்ந்த நிர்வாகிகள், தொண்டர்கள் பங்கேற்றுள்ளனர்.