தமிழக செய்திகள்

8-வது ஊதியக் குழு: அரசு ஊழியர்களுக்கு எவ்வளவு சம்பளம் உயரும் தெரியுமா..?

ஊதிய விகிதம் நடைமுறைக்கு வந்தால், மத்திய அரசு ஊழியர்களின் சம்பளம் அதிரடியாக உயரும் என்று கூறப்படுகிறது.

புதுடெல்லி,

8-வது ஊதிய வரைவுக் குழுவின் கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. கூட்டு ஆலோசனை குழுவின் செயலாளர் சிவ கோபால் மிஸ்ரா தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், பல்வேறு பரிந்துரைகள் குறித்து ஆராயப்பட்டது.

பழைய ஓய்வூதிய திட்டம்

குறிப்பாக, தற்போதைய 3 சதவீத ஆண்டு ஊதிய உயர்வு விகிதத்தை 7 சதவீதமாக உயர்த்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. மேலும், மாத மருத்துவ படியை ரூ.1,000-ல் இருந்து ரூ.20 ஆயிரமாக உயர்த்துவது குறித்தும், விடுப்பு பணமாக்கல் வரம்புகளை 300 நாட்களில் இருந்து 400 நாட்களாக உயர்த்துவது குறித்தும், என்.பி.எஸ். மற்றும் யு.பி.எஸ். திட்டங்களை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை மீட்டெடுப்பது குறித்தும் ஆராயப்பட்டது.

அதிரடியாக உயரும் சம்பளம்

8-வது ஊதியக் குழுவிடம் எப்.என்.பி.ஓ.-ல் முன்மொழியப்பட்ட ஊதிய விகிதம் நடைமுறைக்கு வந்தால், மத்திய அரசு ஊழியர்களின் சம்பளம் அதிரடியாக உயரும்.

நிலை 1 ஊழியர்களின் சம்பளம் ரூ.18 ஆயிரத்தில் இருந்து ரூ.54 ஆயிரமாக அதிகரிக்கும்.

அதேபோல், நிலை 2 (குரூப் சி) ஊழியர்களின் சம்பளம் ரூ.19,900-ல் இருந்து ரூ.59,700 ஆகவும், நிலை 3 (குரூப் சி) ஊழியர்களின் சம்பளம் ரூ.21,700-ல் இருந்து ரூ.65,100 ஆகவும், நிலை 4 (குரூப் சி) ஊழியர்களின் சம்பளம் ரூ.25,500-ல் இருந்து ரூ.76,500 ஆகவும், நிலை 5 (குரூப் சி) ஊழியர்களின் சம்பளம் ரூ.29,200-ல் இருந்து ரூ.87,600 ஆகவும் உயரும்.

இதேபோல், நிலை 6 (குரூப் பி) ஊழியர்களின் சம்பளம் ரூ.35,400-ல் இருந்து ரூ.1 லட்சத்து 8 ஆயிரமாகவும், நிலை 7 (குரூப் பி) ஊழியர்களின் சம்பளம் ரூ.44,900-ல் இருந்து ரூ.1 லட்சத்து 37 ஆயிரமாகவும், நிலை 8 (குரூப் பி) ஊழியர்களின் சம்பளம் ரூ.47,600-ல் இருந்து ரூ.1 லட்சத்து 45 ஆயிரத்து 200 ஆகவும், நிலை 9 (குரூப் பி) ஊழியர்களின் சம்பளம் ரூ.53,100-ல் இருந்து ரூ.1 லட்சத்து 62 ஆயிரமாகவும், நிலை 10 (குரூப் ஏ) ஊழியர்களின் சம்பளம் ரூ.56,100-ல் இருந்து ரூ.1 லட்சத்து 74 ஆயிரமாகவும், நிலை 11 (குரூப் ஏ) ஊழியர்களின் சம்பளம் ரூ.67,700-ல் இருந்து ரூ.2 லட்சத்து 9 ஆயிரத்து 900 ஆகவும், நிலை 12 (குரூப் ஏ) ஊழியர்களின் சம்பளம் ரூ.78,800-ல் இருந்து ரூ.2 லட்சத்து 44 ஆயிரத்து 300 ஆகவும், நிலை 13 (மூத்த நிர்வாகம்) ஊழியர்களின் சம்பளம் ரூ.1 லட்சத்து 18 ஆயிரத்து 500-ல் இருந்து ரூ.3 லட்சத்து 61 ஆயிரத்து 500 ஆகவும்,

நிலை 13 யு (மூத்த நிர்வாகம்) ஊழியர்களின் சம்பளம் ரூ.1 லட்சத்து 31 ஆயிரத்து 100-ல் இருந்து ரூ.3 லட்சத்து 99 ஆயிரத்து 900 ஆகவும், நிலை 14 (மூத்த நிர்வாகம்) ஊழியர்களின் சம்பளம் ரூ.1 லட்சத்து 44 ஆயிரத்து 200-ல் இருந்து ரூ.4 லட்சத்து 54 ஆயிரத்து 300 ஆகவும், நிலை 15 ஊழியர்களின் சம்பளம் ரூ.1 லட்சத்து 82 ஆயிரத்து 200-ல் இருந்து ரூ.5 லட்சத்து 74 ஆயிரமாகவும், நிலை 16 ஊழியர்களின் சம்பளம் ரூ.2 லட்சத்து 5 ஆயிரத்து 400-ல் இருந்து ரூ.6 லட்சத்து 57 ஆயிரத்து 300 ஆகவும், நிலை 17 ஊழியர்களின் சம்பள் ரூ.2 லட்சத்து 25 ஆயிரத்தில் இருந்து ரூ.7 லட்சத்து 31 ஆயிரத்து 300 ஆகவும், நிலை 18 ஊழியர்களின் (அமைச்சரவை செயலாளர்) சம்பளம் ரூ.2 லட்சத்து 50 ஆயிரத்தில் இருந்து ரூ.8 லட்சத்து 12 ஆயிரத்து 500 ஆகவும் அதிகரிக்கும்.

8-வது ஊதியக் குழு

துறை வாரியாக முன்மொழியப்பட்ட பரிந்துரைகளுக்கு இடையே உள்ள வேறுபாடுகளை சரிசெய்வதற்காக, வரைவுக் குழு உறுப்பினர்கள் மார்ச் மாதம் வரை டெல்லியிலேயே தங்கியிருக்க உள்ளனர். இறுதி செய்யப்பட்ட உடன், இந்த கூட்டு குறிப்பாணை நீதிபதி ரஞ்சனா பிரகாஷ் தேசாயிடம் சமர்ப்பிக்கப்பட இருக்கிறது.

இந்த 8-வது ஊதியக் குழுவின் பரிந்துரை அமல்படுத்தும்போது 2026 ஜனவரி 1-ந் தேதி முதல் கணக்கிட்டு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டாலும், ஆணையம் தனது இறுதி அறிக்கையை மத்திய அமைச்சரவைக்கு எவ்வளவு விரைவாக சமர்ப்பிக்கிறது என்பதை பொறுத்தே அமையும்.