தமிழக செய்திகள்

ரூ.20 கோடி திமிங்கல உமிழ்நீர் பதுக்கிய 9 பேர் கைது

சிறுசேரி அருகே ரூ.20 கோடி திமிங்கல உமிழ்நீர் பதுக்கிய 9 பேர் கைது செய்யப்பட்டனர்.

சென்னை,

செங்கல்பட்டு மாவட்டம் சிறுசேரி அருகே திமிங்கல உமிழ்நீர் பதுக்கி வைத்திருப்பதாக வனத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் திருப்போரூர் வனசரக அலுவலர் கல்யாண் தலைமையில், சென்னை வனசரக அலுவலர் ராஜேஷ் மற்றும் வனவர்கள், வனக்காப்பாளர் அடங்கிய குழுவினர் மாறுவேடத்தில் அங்கு சென்று ஆய்வு நடத்தினர்.

திமிங்கல உமிழ்நீர் பதுக்கி வைத்திருந்ததாக கூறப்பட்ட 3 பேரிடம் தங்களுக்கு திமிங்கல உமிழ்நீர் தேவைப்படுவதாக கூறினர். அவர்கள் 3 கிலோ திமிங்கல உமிழ்நீரை எடுத்து வந்து காட்டினர். இதையடுத்து அவர்களை போலீசார் கைது செய்தனர்.

ரூ.20 கோடி மதிப்பு

விசாரணையில் அவர்கள், காஞ்சீபுரத்தை சேர்ந்த மோகன் தாஸ் (வயது 34), கடலூர் மாவட்டம் சிதம்பரத்தைச் சேர்ந்த அருள்முருகன் (30), கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையை சேர்ந்த விக்னேஷ் (29) என்பது தெரியவந்தது. மேலும் இவர்கள் அளித்த தகவலின்பேரில் தாம்பரத்தைச் சேர்ந்த டேனியல் (53), காஞ்சீபுரம் மாவட்டம் நடுவீரப்பட்டு பகுதியை சேர்ந்த ஆதித்யா (43), பெங்களூருவை சேர்ந்த சதீஷ்குமார் (50), நெற்குன்றம் பகுதியை சேர்ந்த முருகன் (48), காஞ்சீபுரம் அருகே தண்டலம் பகுதியை சேர்ந்த மோகன் (50), அரும்பாக்கத்தை சேர்ந்த ராஜன் (51) ஆகிய மேலும் 6 பேரை கைது செய்தனர்.

கைதான 9 பேரிடம் இருந்தும் மொத்தம் 13 கிலோ திமிங்கல உமிழ்நீரை கைப்பற்றினர். இதன் மதிப்பு ரூ.20 கோடி என கூறப்படுகிறது. மேலும் அவர்கள் பயன்படுத்திய ஒரு கார், 2 இருசக்கர வாகனம் உள்ளிட்டவையும் பறிமுதல் செய்யப்பட்டது.

தற்காப்பு கவசம்

இவை திமிங்கலத்தின் செரிமான அமைப்பிலிருந்து உருவாவதாக கூறப்படுகிறது. பொதுவாக, திமிங்கலம் தனது இரையை வேட்டையாடும்போது இந்த வகையான மெழுகு போன்ற திரவத்தை பயன்படுத்துகிறது. திமிங்கலம் தனக்கு பிடித்த கணவாய் மீன்கள், ஆக்டோபஸ்களை வேட்டையாடி விழுங்கும்போது, அந்த மீன்களின் கூரிய உறுப்புகள், முட்கள் மற்றும் பற்களால் திமிங்கலத்தின் உள் உறுப்புகளில் காயம் ஏற்படவும், செரிமான பிரச்சினை ஏற்படவும் மிக அதிக அளவு வாய்ப்பிருக்கிறது. அதை தடுப்பதற்காக இயற்கையிலேயே கொடுக்கப்பட்ட ஒரு தற்காப்பு கவசம்தான் இந்த மெழுகுபோன்ற திரவம். உணவு உட்கொண்ட பின்னர், ஜீரணமாகாத உணவு மற்றும் தேவையற்ற கழிவுகளை வெளியேற்றுகின்றன. கடலில் மிதக்கும் அவை சூரிய ஒளி மற்றும் கடலின் உப்பு நீரால் கறுப்பு, வெள்ளை மற்றும் சாம்பல் நிற அம்பர்கிரிஸ்சாக உருப்பெருகின்றன. இறுதியாக அவை கடற்கரையோரங்களிலும், மீன்பிடி வலைகளிலும் மீட்டெடுக்கப்படுகின்றன.

வாசனை திரவியங்கள் தயாரிக்க...

இவை உலக அளவில் உயர்ரக வாசனை திரவியங்கள் தயாரிக்கும் மூலப்பொருள்களாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. பல்வேறு உடல் பிரச்சினைகளுக்கு மருந்தாகவும் பயன்படுத்தப்படுகிறது. விலை உயர்ந்த மதுபானங்களின் வாசனைக்கும் உயிரோட்டம் கொடுக்கும் மூலப்பொருளாகவும் பயன்படுகிறது.

அம்பர்கிரிஸ் என்று அழைக்கப்படும் இவை சர்வதேச அளவில் 1 கிலோ ரூ.1 கோடி முதல் ரூ.1 கோடி வரை விற்பனை செய்யப்படுகிறது. இதன் மதிப்புக்காகவே திமிங்கலங்கள் அதிக அளவு வேட்டையாடப்படுகின்றன என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.