தமிழக செய்திகள்

விசிக பிரமுகர் கொலை வழக்கு - 9 பேர் கைது

கொலை நடந்த பிறகு 4 பேர் சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து ஸ்டேட்டஸ் வைத்ததாக கூறப்படுகிறது.

ராணிப்பேட்டை,

விசிக பிரமுகர் கொலை வழக்கில் 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

விசிக பிரமுகர் கொலை

ராணிப்பேட்டை மாவட்டம் நாகலேரி கிராமத்தை சேர்ந்தவர் சிவக்குமார். விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகரான இவர் கடந்த 1-ந்தேதி அல்லாளச்சேரி அருகே இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது பின்தொடர்ந்து வந்த மர்ம நபர்கள் சிவக்குமாரை வழிமறித்து சரமாரியாக கத்தியால் குத்திவிட்டு தப்பி சென்றனர். இதில் தலை பகுதியில் பலத்த காயமடைந்த சிவக்குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

கொலை குற்றவாளிகளை கைது செய்யக்கோரி உறவினர்கள் மற்றும் விசிகவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்த நிலையில் மாவட்ட கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு தப்பி ஓடிய மர்ம நபர்களை தேடி வந்தனர்.

9 பேர் கைது

இந்த தனிப்படை போலீசார், சந்தேகத்தின் அடிப்படையில் 9 பேரை கைது செய்தனர். அவர்களில் 4 பேர், கொலை நடந்த பிறகு சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து கொலை ஸ்டேட்டஸ் வைத்ததாக கூறப்படுகிறது. இதன் அடிப்படையில் போலீசார் 4 பேரிடம் விசாரணை செய்தபோது, நண்பனின் கொலைக்கு பழி வாங்குவதற்காக சிவக்குமாரை கொலை செய்ததாக ஒப்புக்கொண்டனர். தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்தப்படுகிறது.

SCROLL FOR NEXT