தாராபுரம்.
தாராபுரம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்ட, நாம் தமிழர் கட்சி பெண் வேட்பாளரை போலீசார் கைது செய்தனர்.
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் (தனி) சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் கடந்த 6-ந் தேதி நடைபெற்றது. இதில் தமிழக வெற்றிக்கழகம் சார்பில் சத்தியபாமா, நாம் தமிழர்கட்சி சார்பில் கார்த்திகா உள்பட அரசியல் கட்சி வேட்பாளர்கள், சுயேட்சைகள் என 22 பேர் போட்டியிட்டனர். வேட்பாளர் சத்தியபாமாவை ஆதரித்து முதல்-அமைச்சர் விஜய் ரோடு ஷோ நடத்தி பிரசாரம் மேற்கொண்டார்.
இந்த நிலையில் நாம் தமிழர் கட்சி வேட்பாளரும், மாநில மகளிர் அணி செயலாளருமான கார்த்திகா, தேர்தலின்போது கட்சி நிர்வாகிகளுடன் சேர்ந்து, முதல்-அமைச்சர் ரோடு ஷோ சென்ற பாதையில் மறியலில் ஈடுபட்டார். தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் ரோடு ஷோ சென்ற பாதையில் அனுமதி அளிக்கப்படாத இடத்தில் இடையூறாக வைக்கப்பட்டிருந்த நாம் தமிழர் கட்சி பதாகையை அகற்றிய போது போலீசாரை அவதூறாக பேசி தாக்க முயன்றதாகவும், காமராஜபுரம் பகுதியில் நாம் தமிழர் கட்சி பொதுக்கூட்டம் நடைபெற்ற இடத்தில் குழந்தையுடன் வீட்டுக்கு சென்ற த.வெ.க. தொண்டர் மீது தாக்குதல் நடத்தியதோடு, அவதூறு வீடியோ பதிவிட்டது உள்ளிட்ட 4 வழக்குகளில் 12-க்கும் மேற்பட்ட பிரிவுகளில் கார்த்திகா உள்பட 9 பேர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்குகளில் தொடர்புடைய நா.த.க. வேட்பாளர் கார்த்திகா, அவரது கணவர் முருகு சந்திரகுமார் ஆகியோரை கோவையில் உள்ள அவர்களது வீட்டுக்கு நேற்று சென்று போலீசார் கைது செய்தனர். மேலும் தென்காசியை சேர்ந்த இசை மதிவாணன், மாநில கொள்கை பரப்பு செயலாளர் சஞ்சய் காந்தி, தாராபுரம் தேர்தல் பொறுப்பாளர் கந்தசாமி, ஷேக்பரீத், தாராபுரம் நகர பொறுப்பாளர் சூர்யா, மாணவர் பாசறை செயலாளர் கோகுல், சோழவந்தான் இளைஞர் பாசறை செயலாளர் விக்னேஷ் உள்பட 9 பேர் கைது செய்யப்பட்டனர்.
இவர்கள் கைது செய்யப்பட்டது தொடர்பாக அவர்களது உறவினர்களுக்கு கூட, என்ன வழக்கில் 9 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர் என தெரிவிக்காமல் அரசியல் பழிவாங்கும் நோக்குடன் தேர்தல் முடிந்து 15 நாட்களுக்கு பிறகு கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நாம் தமிழர் கட்சியினர் தாராபுரம் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
கார்த்திகாவை மருத்துவ பரிசோதனைக்கு அழைத்து வரப்பட்ட போது அவர் நிருபர்களை பார்த்ததும். 'தான் எந்த தவறும் செய்யவில்லை எனவும், இறுதி பிரசார தினத்தன்று முதல்-அமைச்சருக்கு மட்டும்தான் வாக்கு சேகரிக்க உரிமை உள்ளதா? எங்களுக்கு வாக்கு சேகரிக்க உரிமை இல்லையா? இரவு உடையில் என்னை கைது செய்துள்ளனர். நாங்கள் என்ன போதைப்பொருள் கடத்தினோமா? விஜய் ஆட்சி ஒழிக என கோஷம் எழுப்பினார்.
கார்த்திகாவை மருத்துவ பரிசோதனை செய்து மீண்டும் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்த போது போலீசாருக்கும் நாம் தமிழர் கட்சியை சேர்ந்த நிர்வாகிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இந்நிலையில் தாராபுரம் நா.த.க. வேட்பாளர் கார்த்திகா உட்பட 9 பேருக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது. இடைத்தேர்தலின் போது போடப்பட்ட 3 வழக்குகளில் கைதான இவர்கள் நேற்றிரவு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், 5 மணி நேரத்திற்கு மேலாக நடந்த விசாரணையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.