சென்னை,
சென்னையின் போக்குவரத்து நெரிசலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், ரூ.63,246 கோடி மதிப்பீட்டில் சென்னை மெட்ரோ ரெயில் 2-ம் கட்ட திட்டம் 3 முக்கிய வழித்தடங்களில் (5-வது வழித்தடம் வரை நீட்டிப்பு) செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில் கலங்கரை விளக்கம் - பூந்தமல்லி இடையேயான 3-வது வழித்தடம் உயர்மட்டப் பாதையாகவும் நிலத்தடி சுரங்கப்பாதையாகவும் கலவையாக அமைக்கப்பட்டு பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.
இந்த 2-ம் கட்ட திட்டத்தின் முதல் அங்கமாக, பூந்தமல்லி பைபாஸ் முதல் வடபழனி வரை 14.64 கிலோ மீட்டர் தூரத்திற்கான உயர்மட்டப் பாதை பணிகள் அனைத்தும் முழுமையாக முடிக்கப்பட்டு, ரெயில் சேவைக்கு தயார் நிலையில் உள்ளது. பல்வேறு கட்ட பாதுகாப்பு சோதனைகளுக்கு பிறகு, இந்த புதிய வழித்தடம் மக்கள் பயன்பாட்டிற்கு வரவுள்ளது.
மெட்ரோ ரெயில் 2-வது கட்ட பணியில் முதல் சேவை பூந்தமல்லியில் இருந்து வடபழனி வரை தொடங்க இருப்பதால் பொதுமக்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த வழித்தடத்தில் மெட்ரோ ரெயில் சேவை குறித்து திட்ட இயக்குனர் அர்ச்சுனன் கூறியதாவது:-
பூந்தமல்லி - வடபழனி வழித்தடத்தில் 15 ரெயில்கள் இயக்கப்படும். ஒவ் வொரு மெட்ரோ ரெயிலும் மூன்று பெட்டிகளை கொண்டதாகும். தொடக்கத்தில் பயணிகளின் தேவைக்கு இது போது மானதாக இருக்கும் என்று கருதுகிறோம்.
ஒருவேளை தேவை அதிகரித்தால் கூடுதலாக மெட்ரோ ரெயில் இயக்க தயாராக உள்ளோம். மொத்தம் 36 ரெயில்கள் கொள்முதல் செய்யப்பட்டு வைக்கப்பட்டு இருப்பதிலிருந்து முதல் கட்டமாக 15 ரெயில்கள் மட்டும் இயக்கப்படுகிறது. ஆரம்பத்தில் ரெயில்கள் டிரைவருடன் இயக்கப்படும்
2-வது கட்டத்தில் இயக்கப்படும் மெட்ரோ ரெயில்கள் அனைத்தும் டிரைவர் இல்லாமல் தானாக இயங்க கூடிய வகையில் நவீன தொழில் நுட்பத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. திட்ட ஆரம்ப கட்டத்தில் மெட்ரோ ரெயில்கள் டிரைவருடன் இயக்கப்படும். பின்னர் டிரைவர் இல்லாமல் தானியங்கி சிஸ்டத்தில் செயல்படும்.
புதிய சேவையை தொடங்கும் இந்த வழித்தடத்தில் ஒரு மெட்ரோ ரெயில் அதிகபட்சமாக 900 பேர் பயணம் செய்ய முடியும். ஆரம்பத்தில் பத்து நிமிடே இடைவெளியில் மெட்ரோ ரெயில்கள் இயக்கடும். பயணிகள் கூட்டம் அதிகரிக்கும் பட்சத்தில் இந்த இடைவெளி குறைக்கப்பட்டு சேவை அதிகரிக்கப்படும்.
தற்போது நடைமுறையில் உள்ள மெட்ரோ ரெயில் சேவைக்கும் புதிதாக இயக்கப்படவுள்ள மெட்ரோ ரெயில் சேவைக்கும் வித்தியாசம் உள்ளது. தானியங்கி ரெயில் கட்டுப்பாடு மற்றும் தானியங்கி ரெயில் பாதுகாப்பு சிஸ்டம் புதிய மெட்ரோ ரெயில்களில் உள்ளன. மேலும் நவீன தகவல் தொழில்நுட்ப அடிப்படையில் கட்டுப்பாடு அமைப்புகள் உள்ளன. சிக்னல் சிஸ்டம் நவீன தொழில்நுட்பத்தில் கையாளப்படுகிறது.
புதிய மெட்ரோ ரெயில் சேவை பொதுமக்கள் பயன் பாட்டிற்கு எப்போது இருந்து கொண்டு வரப்படும் என்பது சிறப்பு விழாவுக்கு முன்னதாக முடிவு செய்யப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.