கோப்புப்படம் 
தமிழக செய்திகள்

சென்னை மாநகராட்சிப் பள்ளிகளில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 92.96 சதவீத மாணவர்கள் தேர்ச்சி

சென்னை மாநகராட்சிப் பள்ளிகளில் 5,179 மாணவ, மாணவியர் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதினர்.

சென்னை,

சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-

பெருநகர சென்னை மாநகராட்சி கல்வித்துறையின் கீழ் 35 மேல்நிலைப்பள்ளிகள் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. 2025-2026ம் கல்வியாண்டில் நடைபெற்ற 12-ம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் 2,257 மாணவர்கள் மற்றும் 2,922 மாணவியர் என மொத்தம் 5,179 மாணவ, மாணவியர் தேர்வு எழுதினர். இதில் 2,028 மாணவர்கள் (89.85%) மற்றும் 2,750 (94.11%) மாணவியர் என மொத்தம் 4,778 மாணவ, மாணவியர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி சதவீதம் 92.26% ஆகும். (கடந்த ஆண்டின் தேர்ச்சி விகிதம் 88.12% ஆகும்.)

பாடவாரியான தேர்ச்சி சதவிகிதத்தில் கணினி பயன்பாடுகள் பாடப்பிரிவில் 8, கணினி அறிவியல் பாடப்பிரிவில் 10, கணக்குப் பதிவியல் பாடப்பிரிவில் 8, பொருளாதாரம் பாடப்பிரிவில் 2, வணிகக் கணிதம் பாடப்பிரிவில் 2, அடிப்படை இயந்திரப் பொறியியல் பாடப்பிரிவில் 2, உணவு சேவை மேலாண்மைப் பாடப்பிரிவில் 90, நெசவு மற்றும் ஆடை வடிவமைப்பு பாடப்பிரிவில் 4, தணிக்கையியல் பாடப்பிரிவில் 47 என மொத்தம் 173 மாணவ, மாணவியர் 100/100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.

மொத்த மதிப்பெண்கள் அடிப்படையில் 43 மாணவ, மாணவியர் 551-க்கு மேல் 600 வரை மதிப்பெண்களும், 241 மாணவ, மாணவியர் 501-லிருந்து 550 வரை மதிப்பெண்களும், 543 மாணவ, மாணவியர் 451-லிருந்து 500 வரை மதிப்பெண்களும் பெற்றுள்ளனர்.

மதிப்பெண்கள் அடிப்படையில் முதல் ஐந்து இடங்களில் உள்ள பள்ளிகள்: புல்லா அவென்யூ சென்னை பெண்கள் மேல்நிலைப்பள்ளி 600 மதிப்பெண்களுக்கு 593 மதிப்பெண்கள் பெற்று முதலிடத்தையும், பெரம்பூர், எம்.எச். சாலை - சென்னை பெண்கள் மேல்நிலைப்பள்ளி 600 மதிப்பெண்களுக்கு 586 மதிப்பெண்கள் பெற்று இரண்டாமிடத்தையும், பெரம்பூர், மார்க்கெட் தெரு - சென்னை பெண்கள் மேல்நிலைப்பள்ளி 600 மதிப்பெண்களுக்கு 583 மதிப்பெண்கள் பெற்று மூன்றாமிடத்தையும், புல்லா அவென்யூ சென்னை பெண்கள் மேல்நிலைப்பள்ளி 600 மதிப்பெண்களுக்கு 579 மதிப்பெண்கள் பெற்று நான்காமிடத்தையும், புல்லா அவென்யூ சென்னை பெண்கள் மேல்நிலைப்பள்ளி 600 மதிப்பெண்களுக்கு 578 மதிப்பெண்கள் பெற்று ஐந்தாமிடத்தையும் பெற்றுள்ளன.

100 சதவீதம் தேர்ச்சி பெற்ற மேல்நிலைப் பள்ளிகளின் விவரம்: நுங்கம்பாக்கம் சென்னை பெண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் சி.ஐ.டி. நகர் சென்னை மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.