கோப்புப்படம் 
தமிழக செய்திகள்

போரூர் அருகே 14-வது மாடியில் இருந்து குதித்து 9-ம் வகுப்பு மாணவர் தற்கொலை - உருக்கமான கடிதம் சிக்கியது

மன உளைச்சலில் இருந்த மாணவர் தனக்கு வாழ விருப்பமில்லை என கடிதம் எழுதி வைத்துவிட்டு, 14-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

சென்னை,

போரூர் அருகே 14-வது மாடியில் இருந்து குதித்து 9-ம் வகுப்பு மாணவர் தற்கொலை செய்து கொண்டார். அவர் எழுதிய உருக்கமான கடிதம் சிக்கியது.

9-ம் வகுப்பு மாணவர்

சென்னை போரூர் அடுத்த அய்யப்பன்தாங்கல் பகுதியில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் மைதிலி. இவரது மகன் ஜெய்கிருஷ்ணா (16 வயது). இவர், கோவூரில் உள்ள தனியார் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார்.

தற்கொலை

நேற்று அதிகாலை வீட்டில் இருந்த ஜெய்கிருஷ்ணா, திடீரென அடுக்குமாடி குடியிருப்பின் 14-வது மாடியில் இருந்து கீழே குதித்தார். இதில் பலத்த காயமடைந்த அவர், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்து வந்த போரூர் போலீசார், தற்கொலை செய்து கொண்ட ஜெய்கிருஷ்ணாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தினர்.

கடிதம் சிக்கியது

ஜெய்கிருஷ்ணாவுக்கு காது சரியாக கேட்காது என்று கூறப்படுகிறது. மேலும் அவருக்கு படிப்பும் சரியாக வராமல் இருந்ததாகவும், இதனால், அவரை வெளிநாட்டுக்கு அனுப்பி படிக்க வைக்க மேற்கொண்ட முயற்சிகளும் பலனளிக்கவில்லை என தெரிகிறது.

இதனால் மிகுந்த மன உளைச்சலில் இருந்த ஜெய்கிருஷ்ணா, தனக்கு வாழ விருப்பமில்லை என உருக்கமான கடிதம் எழுதி வைத்துவிட்டு, 14-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டது போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் அவர் எழுதிய கடிதத்தையும் போலீசார் கைப்பற்றி விசாரித்து வருகின்றனர்.

SCROLL FOR NEXT