சேலம்,
சேலத்தில் இருந்து கரூருக்கு பஸ்சில் பயணம் செய்த முதியவரிடம் நூதன முறையில் 3 பவுன் தங்க சங்கிலியை திருடிய மர்ம நபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
கரூர் மாவட்டம் பசுபதிபாளையம் பகுதியை சேர்ந்தவர் சாமுவேல் சுந்தரபாண்டியன் (வயது 72). இவர், கடந்த சில நாட்களுக்கு முன்பு சேலத்திற்கு வந்திருந்தார். பின்னர் அவர் மீண்டும் கரூர் செல்வதற்காக புதிய பஸ் நிலையம் வந்து அரசு பஸ்சில் ஏறி அமர்ந்திருந்தார். அப்போது, அங்கு வந்த சுமார் 40 வயது மதிக்கத்தக்க மர்ம நபர் ஒருவர் சாமுவேல் சுந்தரபாண்டியனிடம் நைசாக பேச்சு கொடுத்தார். பின்னர் அந்த நபர், முதியவருக்கு கடைக்கு சென்று டீ வாங்கி கொடுத்துள்ளார்.
இதையடுத்து டீ குடித்த சிறிது நேரத்தில் சாமுவேல் சுந்தரபாண்டியனுக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து அந்த பஸ்சில் அமர்ந்திருந்த அவர், கரூர் பஸ் நிலையத்திற்கு சென்று கண்விழித்து பார்த்தபோது. அவரது கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் தங்க சங்கிலி மாயமாகி இருப்பது தெரியவந்தது. அதாவது. சேலத்திற்கு பஸ்சில் முதியவர் ஏறியபோது அவருக்கு டீ வாங்கி கொடுத்த நபர், டீயில் மயக்க மருந்து கலந்து கொடுத்து நகையை நூதன முறையில் அபேஸ் செய்திருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இது குறித்து சாமுவேல் சுந்தரபாண்டியன் பள்ளப்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பஸ்சில் முதியவரிடம் நூதன முறையில் 3 பவுன் நகையை திருடி சென்ற மர்ம நபரை வலைவீசி தேடி வருகின்றனர்.
மேலும், புதிய பஸ் நிலையத்தில் கரூர் பஸ்கள் செல்லும் மார்க்கத்தில் கண்காணிப்பு கேமரா பதிவுகளை பார்வையிட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஓடும் பஸ்சில் முதியவ ருக்கு டீ வாங்கி கொடுத்து நூதன முறையில் 3 பவுன் நகை திருடப்பட்ட சம்பவம் சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.