வேலூர்,
வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டாவை அடுத்த அகரம்சேரி-ஒடுகத்தூர் சாலையில் வசித்து வரும் மூதாட்டி பொன்னுரங்கம் (வயது 84). இவர் நேற்று காலை வீட்டில் தனியாக இருந்தபோது. அப்பகுதிக்கு வந்த அடையாளம் தெரியாத வாலிபர் ஒருவர் சுமார் ஒரு மணி நேரமாக அப்பகுதியை நோட்டமிட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. அந்த வாலிபர் மூதாட்டியிடம் சென்று குடிப்பதற்கு தண்ணீர் கேட்டுள்ளார்.
மூதாட்டி தண்ணீர் கொண்டு வருவதற்காக வீட்டிற்குள் சென்றபோது. திடீரென பின்தொடர்ந்து உள்ளே புகுந்த வாலிபர், மூதாட்டியின் கழுத்தில் அணிந்திருந்த 4 பவுன் சங்கிலியைப் பறித்துக்கொண்டு அங்கிருந்து தப்பி ஓடி தலைமறைவானார். அதிர்ச்சியடைந்த மூதாட்டி கத்தி கூச்சலிட்டார். அவரின் சத்தம் கேட்டு ஓடி வந்த மகன் அருணகிரி மற்றும் குடும்பத்தினர் அக்கம் பக்கத்தில் வாலிபரை தேடி பார்த்தும் அவரை காணவில்லை. இதுகுறித்து அருணகிரி பள்ளிகொண்டா போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய வாலிபரை தேடி வருகின்றனர்.