தமிழக செய்திகள்

குற்றாலத்தில் காயத்துடன் மீட்கப்பட்ட குட்டி யானை தாயுடன் சேர்ந்தது

வனத்துறையினரின் தீவிர முயற்சியால் ஒருவழியாக குட்டியானை, தாய் யானையுடன் சேர்ந்தது.

தென்காசி,

தென்காசி மாவட்டம் குற்றாலம் வனச்சரகத்திற்கு உட்பட்ட வல்லம் பகுதியில் விவசாய நிலம் அருகே நேற்று முன்தினம் ஒரு குட்டியானை காயங்களுடன் நின்று கொண்டு இருந்தது. இதையறிந்த மாவட்ட வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்றனர். அவர்கள் உடனடியாக யானை மீட்டு கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டனர். மேலும் கால்நடை டாக்டர் களும் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் குட்டி யாைைனய பரிசோதனை செய்த போது அதன் வயிற்றுப்பகுதி, துதிக்கை, பின்னங்கால்களில் காயங்கள் மற்றும் கடுமையான தொற்று இருப்பது தெரி யவந்தது.

இதையடுத்து குட்டி யானைக்கு உடனடியாக சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டன. இதற்கிடையே, தாய் யானை வல்லம் காப்புக்காடு எல்லை பகுதியில் இருப்பது தெரியவந்தது. அதையும் வனத்துறையினர் கண்காணித்தனர். கண்காணிப்பின் போது தாய் யானை, குட்டி இருந்த பகுதிக்கு அருகில் வந்தாலும் உடனடியாக இணைப்பு ஏற்படவில்லை. மேலும், பின்னங்காலில் ஏற்பட்ட வீக்கம் காரணமாக குட்டி யானை மலைப்பகுதியில் இயல்பாக நகர முடியாத நிலை இருந்ததால், தொடர்ந்து சிகிச்சை மற்றும் கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டது.

எனினும் வனத்துறையினரின் தீவிர முயற்சியால் ஒருவழியாக குட்டியானை, தாய் யானையுடன் சேர்ந்தது. அதனுடன் மேலும் 2 யானைகளும் வந்தன. யானைகள் பிளிறியவாறு வனப்பகுதிக்கு சென்றன. இதை வனத்துறையினர் பாதுகாப்பாக தூரத்தில் இருந்து கண்காணித்தனர். நேற்று வனத்துறையினர் மேற்கொண்ட ஆய்வில், யானைகள் பாதுகாப்பாக வனப்பகுதிக்குள் சென்றது உறுதி செய்யப்பட்டது. தொடர்ந்து வனத்துறையினர் டிரோன் மூலம் யானை கூட்டத்தின் நடமாட்டத்தை கண்காணிக்க உள்ளனர்.