தமிழக செய்திகள்

ஓடும் அரசு பேருந்து மீது விழுந்த புளியமரம் - அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பயணிகள்

பழமை வாய்ந்த புளியமரம் ஒன்று வேரோடு சாய்ந்து ஓடும் பேருந்து மீது திடீரென விழுந்தது.

தர்மபுரி,

தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அருகே பன்னிஅள்ளி கிராமத்தில் இருந்து நேற்று காலை பாலக்கோட்டுக்கு அரசு டவுன் பேருந்து வந்தது. இந்த பேருந்தை டிரைவர் மாதப்பன் ஓட்டி வந்தார். கண்டக்டராக சரவணன் உடன் வந்தார். பேருந்தில் 3 பயணிகள் இருந்தனர்.

மாரண்டஅள்ளி அருகே உப்புபள்ளம் என்ற இடத்தில் இந்த பேருந்து வந்து கொண்டிருந்தது. அப்போது சாலையோரம் இருந்த பழமை வாய்ந்த புளியமரம் ஒன்று வேரோடு சாய்ந்து ஓடும் பேருந்து மீது திடீரென விழுந்தது. இதில் பேருந்தின் கண்ணாடிகள் உடைந்து நொறுங்கின. மேலும் முன்பகுதி சேதமடைந்தது.

இந்த விபத்தில், டிரைவர், கண்டக்டர் மற்றும் பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். விபத்து காரணமாக அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.