தமிழக செய்திகள்

திருவாரூர் அருகே போக்சோ வழக்கில் சாட்சியான சிறுவன் தூக்குப்போட்டு தற்கொலை

சிறுவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

திருவாரூர்,

திருவாரூர் அருகே சிறுவர் சீர்திருத்த நீதிமன்ற வழக்கில் சாட்சியாக சேர்க்கப்பட்ட 17 வயது சிறுவன், மனஉளைச்சல் காரணமாக தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தற்கொலை

நாகை மாவட்டம், திருக்குவளை அருகே ஆய்மூர் காலனி தெருவை சேர்ந்த உலகநாதனின் மகன் அபினேஷ் (17). இவர் 12-ம் வகுப்பு படிப்பை முடித்துவிட்டு வீட்டில் இருந்து வந்தார்.

இந்த நிலையில், திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி காவல் சரகத்திற்கு உட்பட்ட கொற்கை பசும்பண்ணை திடலில் உள்ள நாவல் மரத்தில் சிறுவன் ஒருவர் தூக்கில் தொங்குவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து அங்கு விரைந்து சென்ற திருத்துறைப்பூண்டி போலீசார், சிறுவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

சாட்சியாக சேர்ப்பு

இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில், உயிரிழந்தது அபினேஷ் என்பது தெரியவந்தது. இவர் பள்ளியில் படித்தபோது உடன் படித்த சில நண்பர்கள் போக்சோ உள்ளிட்ட வழக்குகளில் சிக்கியுள்ளனர். இந்த வழக்கு சிறுவர் சீர்திருத்த நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இந்த வழக்கில் அபினேஷ் சாட்சியாக சேர்க்கப்பட்டிருந்தார். இதற்காக கடந்த சில நாட்களாக அவர் அடிக்கடி நீதிமன்றத்திற்கு அழைக்கப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் அவர் தீவிர மனஉளைச்சலில் இருந்து வந்ததாக தெரிகிறது.

போலீசார்

இந்த நிலையில், நேற்று மனஉளைச்சல் அதிகரித்ததால் அபினேஷ் தற்கொலை செய்து கொண்டது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து சிறுவனின் தந்தையிடம் புகார் பெற்ற போலீசார், தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். நீதிமன்ற வழக்கில் சாட்சியாக சேர்க்கப்பட்ட 17 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

SCROLL FOR NEXT