ராமநகர்,
கர்நாடக மாநிலம் ராமநகர் மாவட்டம் பீடி காலனியை சேர்ந்தவர் முகமது காசிம் (வயது 27). இவர், பழைய இரும்பு கடை வைத்து வியாபாரம் செய்து வந்தார். முகமது காசிமின் முன்னாள் காதலி அர்பியா கவுசர். இவருக்கு திருமணமாகி விட்டது.
தனது கணவர் முகமது அக்பருடன் பெங்களூரு பேடராயனபுரா போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் வசித்து வந்தார். இதற்கிடையில், திருமணத்துக்கு பின்பும் முகமது காசிமுடன் அர்பியா கவுசர் தொடர்பில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்தனர். அதன்படி, கடந்த 25-ந் தேதி உல்லாசம் அனுபவிக்க பேடராயனபுராவில் உள்ள அர்பியா கவுசர் வீட்டுக்கு முகமது காசிம் வந்திருந்தார். இதுபற்றி அறிந்த முகமது அக்பர் தனது உறவினர்களுடன் சேர்ந்து முகமது காசிமை கையும், களவுமாக பிடித்து அடித்து, உதைத்து தாக்கி இருந்தனர். இதில், பலத்தகாயம் அடைந்த அவர் ராமநகர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில், முகமது காசிமை கொலை செய்ததாக கள்ளக்காதலி அர்பியா கவுசர், அவரது கணவர் முகமது அக்பர் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். விசாரணையில், முகமது அக்பரின் உறவினர்கள் ஓவைஸ் வாசா, முகமது சாந்த் பாஷா என்று தெரிந்தது.
திருமணத்துக்கு முன்பாக முகமது காசிமை அர்பியா கவுசர் காதலித்துள்ளார். சமீபத்தில் சமூக வலைதளம் மூலமாக அவருடன் மீண்டும் பழக்கம் ஏற்பட்டு கள்ளத்தொடர்பாக மாறியுள்ளது. இதுபற்றி முகமது அக்பருக்கு தெரியவந்ததும், தனது மனைவியை கண்டித்துள்ளார். ஆனாலும் அர்பியா கவுசர் கள்ளத்தொடர்பை கைவிடவில்லை. இதன் காரணமாக முகமது காசிமை தீர்த்து கட்டியது தெரிந்தது. இதற்கு தேவையான உதவியை அர்பியா கவுசரும் செய்திருந்ததால், அவரையும் போலீசார் கைது செய்தனர்.