சிறப்பு எஸ்.ஐ. 
தமிழக செய்திகள்

இரவு ரோந்து பணியில் பெண்ணுடன் காரில் உலா... சிறப்பு எஸ்.ஐ. சஸ்பெண்டு

சிறப்பு சப்-இன்ஸ்பெக்டருக்கும் குப்பக்குறிச்சி பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் இடையே பழக்கம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

நெல்லை,

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை அருகே இரவு ரோந்து பணியின் போது பெண்ணுடன் காரில் உலா வந்த சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளார்.

பணியில் அலட்சியம்

பாளையங்கோட்டையை அடுத்த சீவலப்பேரி போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருபவர் ஈஸ்வரமூர்த்தி (வயது 55). இவருக்கும், குப்பக்குறிச்சி பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் இடையே பழக்கம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், சம்பவத்தன்று ஈஸ்வரமூர்த்தி இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அவர் ரோந்து பணியை கவனிக்காமல், தனது சொந்த காரில் அந்த பெண்ணுடன் அமர்ந்து பேசிக் கொண்டிருந்ததாக தெரிகிறது.

அடிதடி தகராறு

இதனை அந்த வழியாக வந்த தங்கராஜ் என்பவர் நேரில் பார்த்துள்ளார். பணியில் இருக்கும்போது இவ்வாறு செயல்பட்ட சிறப்பு சப்-இன்ஸ்பெக்டரை அவர் தட்டிக்கேட்டு கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ஈஸ்வரமூர்த்திக்கும், தங்கராஜுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, கைகலப்பாக மாறியுள்ளது. இந்த சம்பவத்தில் இருவருக்கும் இடையே அடிதடி நடந்ததாக கூறப்படுகிறது.

நடவடிக்கை

இந்த விவகாரம் குறித்து உயர் போலீஸ் அதிகாரிகளுக்கு தகவல் சென்றது. இது தொடர்பாக நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில், பணியில் அலட்சியமாக இருந்து பெண்ணுடன் காரில் உலா வந்ததும், பொதுமக்களுடன் தகராறில் ஈடுபட்டதும் உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ஈஸ்வரமூர்த்தியை பணியிடை நீக்கம் (சஸ்பெண்டு) செய்து உயர் அதிகாரிகள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

இந்த சம்பவம் நெல்லை போலீஸ் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

SCROLL FOR NEXT