தமிழக செய்திகள்

‘காவிரி பள்ளத்தாக்கு அதிகார அமைப்பு நிறுவப்படவேண்டும்’ - பழ.நெடுமாறன்

தமிழகம் மீண்டும் சுப்ரீம் கோர்ட்டின் கதவைத் தட்டவேண்டிய நிலைமையில்தான் இருக்கிறது என பழ.நெடுமாறன் தெரிவித்துள்ளார்.

சென்னை,

உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;-

“காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு மற்றும் காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் அவசரக் கூட்டம் தில்லியில் நடைபெற்று, அதையடுத்து காவிரியிலிருந்து தமிழகத்திற்கு “கர்நாடகம் நாளொன்றுக்கு 1 டி.எம்.சி. வீதம் 15 நாட்களுக்கு 15 டி.எம்.சி. நீரைத் திறந்துவிட ஒழுங்காற்றுக்குழு பரிந்துரைத்தது. இதைத் தொடர்ந்து காவிரி நீர் மேலாண்மை ஆணையம் கூடி அதை உறுதி செய்து அவ்வாறே 15 டி.எம்.சி. நீரைத் தமிழகத்திற்குத் திறந்துவிடுமாறு கர்நாடகத்திற்கு ஆணைப் பிறப்பித்தது.

ஏற்கெனவே சூலை 28 ஆம் நாள் கூடிய காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் அவசரக் கூட்டத்தில் தமிழகத்திற்கு 15 நாட்களுக்கு நாளொன்றுக்கு 3,500 கன அடி வீதம் மொத்தம் 4 டி.எம்.சி. தண்ணீரைத் திறந்துவிட கர்நாடகத்திற்கு ஆணையிட்டது. அந்த ஆணையை கர்நாடகம் நிறைவேற்ற மறுத்தது.

இப்போது 15 டி.எம்.சி. தண்ணீரை அளிக்குமாறு காவிரி மேலாண்மை ஆணையம் பிறப்பித்த உத்தரவை “அணைகளில் தண்ணீர் இருப்பை கருத்தில் கொண்டு தண்ணீர் திறந்துவிடுவது தொடர்பாக முடிவெடுக்கப்படும்” என்று கர்நாடக முதலமைச்சர் டி.கே. சிவக்குமார் செய்தியாளர் கூட்டத்தில் அறிவித்திருக்கிறார். மேலும், “கர்நாடக விவசாயிகளைப் பாதுகாக்கவே மக்கள் எங்களை ஆட்சி அதிகாரத்தில் அமரவைத்துள்ளனர். எந்த காரணத்திற்காகவும் எந்தவொரு விவசாயிக்கும் இன்னல் நேரிட நாங்கள் விடமாட்டோம்” என அறிவித்திருப்பதின் மூலம் தமிழகத்திற்குத் தண்ணீர் தர முன்வருவாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

1974 ஆம் ஆண்டு நவம்பர் இறுதியில் டெல்லியில் தமிழக முதல்-அமைச்சர் மு.கருணாநிதி, கர்நாடக முதல்வர் தேவராஜ் அர்சு, கேரள முதல்வர் அச்சுதமேனன் ஆகிய மூன்றுபேரும் கூடிப் பேசி காவிரிப் பள்ளத்தாக்கு அதிகார அமைப்பு ஏற்படுத்தும் யோசனையை ஒப்புக்கொண்டார்கள். ஆனால், அந்த அமைப்பு அமைக்கப்படுவதற்கு முன்னரே இந்திய அரசு தானே இப்பிரச்சனைக்குத் தீர்வு காண்பதாக கூறியதால், முதல்வர்களிடையே கொள்கையளவு உடன்பாட்டுடன் இந்தப்பேச்சுகள் நின்றன. அதன்பிறகு இந்திய அரசு காலம் கடத்தியதே தவிர, காவிரிப் பிரச்சனையைத் தீர்க்க முன்வரவில்லை. தொடர்ந்து வந்த பிரதமர்களும் அவ்வாறே செய்தனர். பிரதமராக பி.வி. நரசிம்மராவ் இருந்தபோது, மூன்று மாநில முதல்வர்களும் ஒப்புக்கொண்டபடி, காவிரிப் பள்ளத்தாக்கு அதிகார அமைப்பை அமைக்காமல் காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு, காவிரி நீர் மேலாண்மை ஆணையம் என எந்த அதிகாரமும் இல்லாத அமைப்புகளை நிறுவி பிரச்சனையை நீர்த்துப்போக வைத்தார்.

காவிரி பள்ளத்தாக்கு அதிகார அமைப்பு அமைக்கப்பட்டால் அதனுடைய முழு கட்டுப்பாட்டில் காவிரி தொடர்பாக இந்த மூன்று மாநிலங்களிலும் உள்ள அணைகள் பாசனக் கால்வாய்கள் அனைத்தும் அதன் அதிகார வரம்பிற்குள் சென்றுவிடும். எந்த மாநிலத்திற்கும் அணைகளின் நீரைத் திறந்துவிடுவதோ அல்லது மூடுவதோ அனைத்தும் அதனுடைய கட்டுப்பாட்டில் இருக்கும். அணையில் நீர் இல்லை நாங்கள் என்ன செய்வது? என்று கர்நாடகம் நாடகம் ஆடுவதுபோன்ற செயல்கள் நடைபெற முடியாது. அனைத்து அதிகாரமும் படைத்த அமைப்பாக அது விளங்கும்.

காவிரி நீர் மேலாண்மை ஆணையம் பிறப்பித்த உத்தரவை கர்நாடகம் மதிக்க மறுக்கும்போது, யாரும் எதுவும் செய்ய முடியவில்லை. தமிழகம் மீண்டும் சுப்ரீம் கோர்ட்டின் கதவைத் தட்டவேண்டிய நிலைமையில்தான் இருக்கிறது. காவிரிப் பள்ளத்தாக்கு அதிகார அமைப்பை நிறுவினாலொழிய காவிரிப் பிரச்சனைக்குத் தீர்வு காண முடியாது. தமிழகத்திற்கு நியாயம் கிடைக்கும். இல்லாவிட்டால் அதுவரை தமிழகம் காவிரியில் பெருகிவரும் வெள்ள நீரைத் தவிர தனக்கு உரிமையான நீரை உரிய காலத்தில் பெறவே முடியாது.”

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.