சென்னை,
சென்னை புறநகர் ரெயிலில் தவறவிட்ட ரூ.70,000 மதிப்பிலான ஐபோனை நேர்மையுடன் போலீசாரிடம் ஒப்படைத்த தூய்மைப் பணியாளருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்திலிருந்து கும்மிடிப்பூண்டி நோக்கிச் சென்ற புறநகர் மின்சார ரெயிலில் வழக்கம் போல் தூய்மைப் பணியாளர் சூரி துப்புரவுப் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, ரெயில் பெட்டியில் கேட்பாரற்றுக் கிடந்த ரூ.70,000 மதிப்புள்ள விலையுயர்ந்த ஐபோன் ஒன்றை அவர் கண்டெடுத்தார்.
விலையுயர்ந்த அந்த செல்போனை எடுத்துச் சென்ற சூரி, சிறிதும் தயங்காமல் ரெயில்வே பாதுகாப்புப் படை போலீசாரிடம் நேர்மையுடன் ஒப்படைத்தார்.
இதற்கிடையே, ரெயிலில் பயணம் செய்த நரேந்திரக்குமார் என்பவர் தனது செல்போன் தொலைந்துவிட்டதாக ரெயில்வே போலீசாரிடம் புகார் அளித்திருந்தார். போலீசார் உரிய விசாரணை நடத்தி, செல்போன் நரேந்திரக்குமாருடையது என்பதை உறுதி செய்தனர். பின்னர் அவரை நேரில் அழைத்து செல்போனைப் பத்திரமாக ஒப்படைத்தனர்.
விலையுயர்ந்த செல்போனை உரியவரிடம் சேர்க்க உதவிய தூய்மைப் பணியாளர் சூரியின் நேர்மையை ரெயில்வே போலீசாரும், பொதுமக்களும் வெகுவாகப் பாராட்டி வருகின்றனர்.