தமிழக செய்திகள்

ஒரு இளநீர் ரூ.80-க்கு விற்பனை: பொதுமக்கள் அதிர்ச்சி.!

இளநீர் ரூ.80-க்கு விற்பனை செய்யப்படுவதால் இளநீர் வாங்க வரும் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

சேலம்,

தமிழகம் முழுவதும் கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் சேலம் மாவட்டத்திலும் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக 100 டிகிரிக்கு மேல் வெயிலின் அளவு பதிவாகி வருவதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகிறார்கள். வெயிலின் தாக்கத்தால் மக்கள் பகலில் வெளியே செல்வதை தவிர்த்து வீடுகளிலேயே முடங்கியுள்ளனர். அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே வெளியில் சென்று வருகிறார்கள்.

சேலம் மாநகரில் பகலில் வெயிலின் தாக்கம் காரணமாக வேலைக்கு செல்லும் நபர்கள் ஆங்காங்கே சாலையோரம் நின்று இளநீர், பழச்சாறு, கரும்பு ஜூஸ், மோர், குளிர்பாளம் போன்றவற்றை வாங்கி பருகி உடல் வெப்பத்தை தணித்து செல்கின்றனர். ஆனால் மாநகரில் பல்வேறு இடங்களில் சாலையோரம் விற்கப்படும் இளநீர் விலை தற்போது அதிகரித்துள்ளது.

அதாவது, பொள்ளாச்சியில் இருந்து சேலத்திற்கு கொண்டு வந்து விற்கப்படும் ஒரு இளநீர் ரூ.80-க்கு விற்பனை செய்யப்படுவதால் இளநீர் வாங்க வரும் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அதேசமயம் பல்வேறு இடங்களில் உள்ளூரில் இருந்து கொண்டு வந்து விற்பனை செய்யப்படும் சிறிய வகை இளநீர் ரூ.50 முதல் ரூ.60 வரைக்கும் விற்பனை செய்யப்படு கிறது. கோடை வெயிலுக்கு இயற்கை பானமாக கருதப்படும் இளநீர் அருந்தினால் உடலுக்கு நல்லது என்று டாக்டர்கள் பரிந்துரை செய்வதால் பெரும்பாலானோர் தினமும் இளநீர் பருகுவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

ஆனால் கோடை வெயிலின் தாக்கம் காரணமாக இளநீர் வியாபாரிகள் தற்போது கூடுதல் விலைக்கு இளநீர் விற்பனை செய்து வருவது பொது மக்களை அதிர்ச்சி அடைய செய்கிறது. இதனால் வேலைக்கு செல்லும் அல்லது பல்வேறு தேவைகளுக்காக வீடுகளில் இருந்து வெளியே செல்லும் நபர்கள் சாலையோரம் விற்கப்படும் கரும்பு ஜூஸ், பழச்சாறு, மோர் ஆகியவற்றை வாங்கி பருகி செல்கின்றனர்.