தமிழக செய்திகள்

மரணத்திலும் இணைபிரியாத தம்பதி: கணவர் இறந்த துக்கத்தில் மனைவியும் உயிரிழந்தார்

கணவரின் மரணச் செய்தியைக் கேட்டதும் நிலைகுலைந்து போன அங்காளம்மை, நெஞ்சு வலியால் துடித்து சம்பவ இடத்திலேயே கண்ணீர் விட்டபடி உயிரிழந்தார்.

ராமநாதபுரம்,

ராமநாதபுரத்தில் கணவர் இறந்த துக்கத்தில் இறப்பிலும் இணைபிரியாத அவரது மனைவியும் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.

கணவர் உயிரிழப்பு

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே உள்ள கீழச்சிறுபோது கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜாமணி (வயது 68). விவசாயியான இவருக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது.

இதையடுத்து அவர் ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் சிகிச்சை பலனின்றி இன்று (வியாழக்கிழமை) காலை ராஜாமணி பரிதாபமாக உயிரிழந்தார்.

அதிர்ச்சியில் பிரிந்த உயிர்

ஆஸ்பத்திரியில் கணவர் இறந்த தகவலை உறவினர்கள் வீட்டில் இருந்த அவரது மனைவி அங்காளம்மைக்கு (வயது 63) தெரிவித்தனர். கணவரின் மரணச் செய்தியைக் கேட்டதும் நிலைகுலைந்து போன அங்காளம்மை, நெஞ்சு வலியால் துடித்து சம்பவ இடத்திலேயே கண்ணீர் விட்டபடி உயிரிழந்தார்.

கிராமமே சோகம்

இறப்பிலும் இணைபிரியாத இந்த தம்பதியருக்கு ஒரு மகனும், மூன்று மகள்களும் உள்ளனர். நீண்ட காலம் ஒன்றாக வாழ்ந்து, மரணத்திலும் அடுத்தடுத்து இணைந்த இந்த தம்பதியின் பாசப் பிணைப்பைக் கண்டு ஒட்டுமொத்த கிராமமே சோகத்தில் மூழ்கியுள்ளது.

இவர்களது இறுதிச் சடங்கு இன்று மாலை கீழச்சிறுபோது கிராமத்தில் நடைபெற உள்ளது.