ஆலந்தூர்.
சென்னை ஈஞ்சம்பாக்கம் பகுதியில் பிரபல நடிகர் ரவி மோகனின் வீடு உள்ளது. இந்த நிலையில் நேற்று முன்தினம் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு நடிகர் ரவி மோகன் வீட்டுக்கு வேலைக்கு சென்றவர்கள் வீடு திரும்பவில்லை என்ற தகவல் வந்துள்ளது.
இதையடுத்து நீலாங்கரை போலீசார் அவரது வீட்டுக்கு சென்று பார்த்த போது 2 பணிப்பெண்கள் மற்றும் அவரது மகன் வீட்டிற்குள் சிறைபிடிக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்ததாக தெரிகிறது.
விசாரணையில், வீட்டில் இருந்து பொருட்கள் திருடப்பட்டதாக சந்தேகித்ததால் அவர்கள் தங்க வைக்கப்பட்டிருந்ததாக நடிகர் தரப்பில் தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
திருட்டு தொடர்பான குற்றச்சாட்டுகள் இருந்தால் சட்டப்படி போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்க வேண்டும் என்றும், தனிப்பட்ட முறையில் விசாரணை நடத்தவோ அல்லது யாரையும் தங்க வைத்து விசாரிக்கவோ கூடாது என்றும் போலீசார் அறிவுறுத்தினர். பின்னர் சம்பந்தப்பட்ட பணிப்பெண்கள் மற்றும் அவர்களுடன் இருந்த சிறுவனை போலீசார் அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.
மேலும், உரிய ஆதாரங்களுடன் போலீஸ் நிலையத்தில் முறைப்படி புகார் அளிக்குமாறு நடிகர் தரப்பினருக்கு போலீசார் அறிவுறுத்தி இருந்தனர்.
இந்நிலையில் நடிகர் ரவி மோகன் வீட்டில் ரூ.10 லட்சம் மதிப்பிலான வைர நெக்லஸ் மற்ரும் ரூ.40 ஆயிரம் பணத்தை ஊழியர்கள் திருடிவிட்டதாக அவரது மேலாளர் நீலாங்கரை போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.