தூத்துக்குடி,
தூத்துக்குடி துறைமுக கடற்கரையில் அழுகிய நிலையில் டால்பின் மீன் கரை ஒதுங்கியது.
தூத்துக்குடி வ.உ.சி துறைமுக கடற்கரை பகுதியில் நேற்று முன்தினம் மாலையில் அழுகிய நிலையில் ஒரு ராட்சத டால்பின் கரை ஒதுங்கி உள்ளது. இதனால் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசி வந்தது. இது குறித்து அந்த பகுதியை சேர்ந்த மீனவர்கள் மன்னார் வளைகுடா உயிர்க்கோள காப்பக வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்துக்கு வனச்சரக அலுவலர் பாபு தலைமையில் வனவர்கள் லிங்கமுத்து, ஆனந்த் ஆகியோர் வந்து ஆய்வு செய்தனர்.
அந்த டால்பின் சுமார் 8 அடி நீளமும், 500 கிலோ எடை கொண்டதாக இருந்தது. உடல் அழுகிய நிலையில் இருந்ததால், முள்ளக்காடு கால்நடை டாக்டர் செந்தில்கண்ணன் வரவழைக்கப்பட்டு, சம்பவ இடத்திலேயே பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதன்பேரில், இது ஆண் டால்பின் என்பதும், சில நாட்களுக்கு முன்பு ஏதேனும் படகில் மோதி டால்பின் இறந்து இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. அதன்பிறகு இறந்த டால்பின் நீரோட்டத்தால் தூத்துக்குடியில் கரை ஒதுங்கி இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து கடற்கரையில் குழி தோண்டப்பட்டு, இறந்த டால்பின் உடல் புதைக்கப்பட்டது.