சென்னை,
தமிழகத்தில் இதுவரையிலான 74 ஆண்டு கால அரசியல் வரலாற்றில், முதல் 15 ஆண்டுகள் காங்கிரஸ் கட்சியும், அடுத்த 59 ஆண்டுகள் தி.மு.க., அ.தி.மு.க. என திராவிட கட்சிகளும் மாறி மாறி ஆட்சி அமைத்து வந்துள்ளன. இந்த நிலையில், நடைபெற்று முடிந்த 17-வது சட்டசபை தேர்தலில், புதிய வரவான தமிழக வெற்றிக் கழகம், முதல் தேர்தலிலேயே முத்திரை பதித்து வெற்றியை பதிவு செய்துள்ளது. அக்கட்சியின் தலைவர் ஜோசப் விஜய், முதல்-அமைச்சராக பொறுப்பேற்றுள்ளார்.
தமிழகத்தின் 12-வது முதல்-அமைச்சராக ஜோசப் விஜய் பதவியேற்றபோதே, அந்த விழாவில் தி.மு.க.வின் முன்னாள் தென்மண்டல அமைப்பாளர் மு.க. அழகிரியின் மகளான கயல்விழி கலந்துகொண்டார். மறைந்த முன்னாள் தி.மு.க. தலைவரும், முதல்-அமைச்சருமான கருணாநிதியின் குடும்பத்தில் இருந்து, ஒருவர் வந்து கலந்துகொண்டது பரபரப்பாக பேசப்பட்டது. மேலும், விரைவில் அவர் த.வெ.க.வில் இணையப்போவதாகவும் கூறப்பட்டது.
ஏற்கனவே, மு.க.அழகிரியின் கோட்டையாக மதுரை விளங்கிவந்தது. ஒரு கட்டத்தில், அவருடைய ஆதரவாளர்கள் பலர் மு.க.ஸ்டாலின் பக்கம் திரும்பிவந்தனர். தற்போது, அரசியலைவிட்டே மு.க.அழகிரி ஒதுங்கி இருக்கும் நிலையில், அவருடைய மகள் கயல்விழி த.வெ.க.வில் இணைந்து, அரசியல் செல்வாக்கை மீட்க திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது.
அந்த வகையில், உள்ளாட்சித் தேர்தலை கருத்தில் கொண்டு கயல்விழி செயல்படுவதாக சொல்லப்படுகிறது. மதுரை மாநகராட்சியின் மேயர் பதவியை அவர் குறிவைத்திருப்பதாகவும் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது. கருணாநிதியின் குடும்பத்தில் இருந்து த.வெ.க.வுக்கு கிடைக்கப்போகும் இந்த நேரடி ஆதரவு தி.மு.க. தலைமைக்கு புதிய தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.