கொடைக்கானல்,
கொடைக்கானல் ஏரியில் குற்றங்களைத் தடுக்க நவீன கேமராவுடன் மிதக்கும் எந்திரத்தை நகராட்சி நிர்வாகம் அறிமுகம் செய்துள்ளது.
சர்வதேச சுற்றுலா தலமான கொடைக்கானலில் நகரின் மையப்பகுதியில் பிரசித்தி பெற்ற நட்சத்திர ஏரி அமைந்துள்ளது. இங்கு வரும் சுற்றுலாப்பயணிகள் ஏரியில் படகு சவாரி செய்வது வழக்கம். இதையடுத்து ஏரியை சுற்றி குற்றச்சம்பவங்கள் நடைபெறுவதை தடுக்கும் வகையிலும், யாரேனும் தவறி விழுந்தால் அவர்களை துரிதமாக மீட்கவும், சுத்தமாகவும் வைத்திருக்க முடிவு செய்யப்பட்டது. இதற்காக நகராட்சி நிர்வாகத்தின் சார்பில் புதிய முயற்சியாக சிறிய ரக படகு வடிவிலான தூய்மைப்படுத்தப்படும் எந்திரம் அறிமுகம் செய்யப்பட்டது.
இந்த எந்திரத்தின் சோதனை ஓட்டம் நகராட்சி ஆணையாளர் அரவிந்த், நகர்நல அலுவலர் டாக்டர் அரவிந்த் கிருஷ்ணன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. ரூ.12 லட்சம் மதிப்பிலான இந்த எந்திரத்தில் சிறிய ரக படகு போல மிதக்கும் வகையிலும், இரவு நேரத்தில் படம் பிடிக்கும் வகையில் நவீன கேமராக்களும் பொருத்தப்பட்டுள்ளது. அதேபோல 'ரிமோட்' மற்றும் தானாக இயங்கும் வடிவில் தயார் செய்யப்பட்டுள்ளது. மேலும் ஏரிக்குள் தேங்கும் குப்பைகள் மற்றும் பாட்டில்களை அகற்றி சுத்தப்படுத்தும் பணியில் இந்த எந்திரம் வேகமாக செயல்படுகிறது. இதனைத்தொடர்ந்து வரும் நாட்களில் நட்சத்திர ஏரியில் 24 மணி நேரமும் கண்காணித்து, குற்றச்செயல்களை முற்றிலும் தடுக்கும் வகையிலும், குப்பைகளை அகற்றி சுத்தமாக வைப்பதற்கும் நகராட்சி சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.