தமிழக செய்திகள்

பேரம்பாக்கம் அருகே உடற்பயிற்சியாளரை வழிமறித்து கத்தியால் வெட்டிய கும்பல்

பேரம்பாக்கம் அருகே மோட்டார் சைக்கிளில் சென்ற உடற்பயிற்சியாளரை வழிமறித்து கத்தியால் வெட்டிய 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

பேரம்பாக்கம், 

பேரம்பாக்கம் அருகே உள்ள சின்னமண்டலி கிராமத்தை சேர்ந்தவர் மணி (வயது 23). இவர் பேரம்பாக்கம் அருகே உள்ள மப்பேடு பகுதியில் உடற்பயிற்சி கூடம் (ஜிம்) வைத்து நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு மணி வழக்கம் போல உடற்பயிற்சி கூடத்தை மூடிவிட்டு மோட்டார் சைக்கிளில் சின்ன மண்டலி நோக்கி சென்று கொண்டிருந்தார்.

அவர் பேரம்பாக்கம் அருகே வந்தபோது 4 பேர் கொண்ட கும்பல் அவரை வழிமறித்தனர். ஆனால் அவர் நிற்காமல் வேகமாக சென்றார். இருப்பினும் மோட்டார் சைக்கிளில் அவரை பின்தொடர்ந்த அந்த கும்பல் மணியை வழிமறித்து தாங்கல் வைத்திருந்த கத்தியால் உடலின் பல்வேறு இடங்களில் வெட்டி விட்டு தப்பி சென்றனர்.

இதில் பலத்த காயம் அடைந்த மணியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ரத்த வெள்ளத்தில் கிடந்த மணியை மீட்டு சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக சென்னை ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்த புகாரின் பேரில் மப்பேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து முன்விரோதம் காரணமாக மணியை யாரேனும் வழிமறித்து தாக்குதல் நடத்தினார்களா அல்லது வேறு ஏதேனும் காரணமா என பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகிறார்கள்.

SCROLL FOR NEXT