தமிழக செய்திகள்

சென்னையில் கூட்ட நெரிசலில் தவறிப்போன சிறுமி மீட்பு: ரெயில்வே போலீசாருக்கு பயணிகள் பாராட்டு

சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்படத் தயாராக இருந்தபோது, பொதுப்பெட்டி அருகே பெண் ஒருவர் தனது குழந்தையைக் காணவில்லை என்று கதறி அழுது தேடிக் கொண்டிருந்தார்.

சென்னை,

சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் நேற்று மாலை கூட்ட நெரிசலில் தவறிப்போன 5 வயது சிறுமியை ரெயில்வே பாதுகாப்புப் படை (RPF) மற்றும் அரசு ரெயில்வே போலீசார் (GRP) சில நிமிடங்களிலேயே சாமர்த்தியமாக மீட்டு அவளது பெற்றோரிடம் ஒப்படைத்துள்ளனர்.

சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தின் 5-வது நடைமேடையில் நேற்று மாலை 5 மணியளவில் கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்படத் தயாராக இருந்தது. அப்போது பொதுப்பெட்டி அருகே பெண் ஒருவர் தனது குழந்தையைக் காணவில்லை என்று கதறி அழுது தேடிக் கொண்டிருந்தார்.

5 வயது சிறுமி மீட்பு:

அப்போது அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த ஆர்.பி.எஃப். பெண் காவலர் ஸ்வாதி உடனடியாக ஜி.ஆர்.பி. போலீசாருக்குத் தகவல் கொடுத்துவிட்டு நடைமேடை முழுவதும் தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளார். போலீசாரின் துரித நடவடிக்கையால், அதே நடைமேடையில் இருந்த ஏசி பெட்டி அருகே தனியாக நின்று அழுதுகொண்டிருந்த தர்ஷனா என்ற அந்த 5 வயது சிறுமி பத்திரமாக மீட்கப்பட்டாள்.

போலீசார் மேற்கொண்ட விசாரணையில், குடும்பத்துடன் பயணம் செய்ய வந்த இடத்தில் கூட்ட நெரிசல் காரணமாக அந்தச் சிறுமி பெற்றோரைப் பிரிந்தது தெரியவந்தது. அடையாளங்கள் உறுதி செய்யப்பட்டு சிறுமி பத்திரமாக ஒப்படைக்கப்பட்டதைத் தொடர்ந்து, நெகிழ்ந்துபோன பெற்றோர் மற்றும் அங்கு திரண்டிருந்த பயணிகள் அனைவரும் ரெயில்வே பாதுகாப்புப் படையினரின் இந்த மின்னல் வேகச் செயல்பாட்டையும் கடமை உணர்வையும் வெகுவாகப் பாராட்டினர்.