சென்னை,
கைத்தறி மற்றும் விசைத்தறித் தொழிலாளர்களின் வயிற்றில் த.வெ.க. அரசு அடிப்பதாக கூறி எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது;-
தமிழர் திருநாளாம் தைப் பொங்கல் திருநாளை, தமிழக மக்கள் அனைவரும் மன நிறைவோடு சிறப்பாகக் கொண்டாட வேண்டும் என்ற உயரிய நோக்கத்திலும், அதேநேரம் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட விசைத்தறி மற்றும் கைத்தறி நெசவாளர்களின் வாழ்வில் ஒளியேற்றும் வகையில் விலையில்லா வேட்டி, சேலை வழங்கும் உயரிய திட்டத்தை எம்.ஜி.ஆர். 1983-ஆம் ஆண்டு கொண்டுவந்தார். தொடர்ந்து ஆட்சிக்கு வந்த அனைத்து அரசுகளும் இத்திட்டத்தை சிறப்பாகச் செயல்படுத்தி வந்தன. இதன் காரணமாக, கோடிக்கணக்கான ஏழை, எளிய, நடுத்தர மக்கள் ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையை சிறப்பாகக் கொண்டாடியதுடன், கைத்தறி மற்றும் விசைத்தறி நெசவாளர்களுக்கும் தொடர்ந்து வேலை கிடைத்தது.
வெற்று விளம்பரங்களால், 6 மாதங்களுக்கு முன்பு ஆட்சிக்கு வந்த ஜோசப் விஜய் தலைமையிலான வாடகைக் கால் கூட்டணி அரசு, வருகின்ற பொங்கலுக்கு தரமான வேட்டி, சேலை வழங்கப்போவதாக தம்பட்டம் அடித்தது. அதற்கான நிதியும் ஒதுக்கப்பட்ட நிலையில், 8 முழ வேட்டியை 4 முழமாக்கி, ஒருசில மாறுதல்களைச் செய்து, சுமார் 4 மாதகால தாமதத்திற்குப் பிறகு தற்போதுதான் 2027-ம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு விலையில்லா வேட்டி, சேலை நெய்வற்கு ஆணை வழங்க முடிவு எடுக்கப்பட்டதாகவும், பொங்கல் பண்டிகைக்கு இன்னும் 2 மாத காலமே அவகாசம் உள்ளதால் விலையில்லா வேட்டி, சேலை தயாரிக்கும் ஆர்டரை 'ஆட்டோ லூம்' தொழில் நடத்துபவர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளதாக, தமிழ் நாடு விசைத்தறிச் சங்கங்களின் கூட்டமைப்பினர் தெரிவிக்கின்றனர்.
பொதுவாக, விலையில்லா வேட்டி, சேலை நெய்யும் பணிகள் (ஆர்டர்) ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் வழங்கப்பட்டு, ஜனவரி மாதம் தைப் பொங்களில் பயனாளிகளுக்கு விலையில்லா வேட்டி, சேலை வழங்கப்படும். த.வெ.க. அரசு வேட்டி, சேலை டிசைன்களில் மாற்றங்கள் பற்றி முடிவெடுக்க தாமதமானதால் இந்த ஆண்டு விலையில்லா வேட்டி, சேலை உற்பத்தி ஆர்டர்களை 'ஆட்டோ லூம்' உற்பத்தியாளர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளதாக தமிழ் நாடு விசைத்தறிச் சங்கங்களின் கூட்டமைப்பின் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். அரசு முடிவெடுக்க தாமதமானதால், விசைத்தறி நெசவாளர்கள் பாதிக்கப்படுவது எப்படி நியாயமாகும்? மேலும், விசைத்தறி நெசவாளர்களை அழைத்துப் பேசி, குறிப்பிட்ட கால கெடுவுக்குள் விலையில்லா வேட்டி, சேலை வழங்கப்பட வேண்டும் என்று கூறி, அவர்களது வாழ்வாதாரத்தைக் காப்பாற்ற வேண்டியது அரசின் கடமை அல்லவா?
ஆனால், இந்த த.வெ.க. அரசு இதையெல்லாம் செய்யாமல், விலையில்லா வேட்டி, சேலை உற்பத்தி ஆர்டர்களை 'ஆட்டோ லூம்' உற்பத்தியாளர்களுக்கும் வழங்கியதால், சுமார் 5 லட்சம் கைத்தறி மற்றும் விசைத்தறித் தொழிலாளர்கள் வேலை இழந்து; வாழ்வாதாரத்தை இழந்து நிற்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதற்கு யார் பொறுப்பு?
கடந்த 6 மாதகால த.வெ.க. கூட்டணி ஆட்சியில், கடும் விலைவாசி உயர்வால் நெசவாளர்களும், விசைத்தறித் தொழிலாளர்களும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த அரசு விலையில்லா வேட்டி, சேலை உற்பத்தியினை, விசைத்தறி நெசவாளர்களைப் புறக்கணித்துவிட்டு தானியங்கி தறிகளுக்கும் உற்பத்தி ஆர்டர்கள் தருவதால், விசைத்தறி நெசவாளர்களுடைய வாழ்வாதாரமே பாதிக்கப்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
தமிழக மக்களின் நலனில் சிறிதும் அக்கறை காட்டாத ஒரு ஆட்சியாளர்களை இப்போது தான் முதன் முதலில் தமிழகம் சந்திக்கிறது! வெட்டி விளம்பர மோகத்தில் அலையாமல்; கைத்தறி மற்றும் விசைத்தறித் தொழிலாளர்களின் வயிற்றில் அடிக்காமல்; உரிய நேரத்தில் பொங்கலுக்கான வேட்டி, சேலைகளை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாடகைக் கால் த.வெ.க. அரசை வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.